முன்னாள் போராளிகள் தங்கள் முடிவை மீள் பரிசீலனை செய்ய வேண்டும்! ஆனந்தசங்கரி கோரிக்கை
முன்னாள் போராளிகளுக்காக எமது கதவுகள் என்றும் திறந்தே இருக்கும். சுயேச்சையாக போட்டியிட முடிவெடுத்துள்ள முன்னாள் போராளிகள் தமது முடிவை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி கோரியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் கலந்து செயற்பட எண்ணியதை தமிழர் விடுதலைக் கூட்டணி மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றது.
அவர்களின் பெயரைப் பயன்படுத்தி பாராளுமன்றம் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், முன்னாள் போராளிகளின் அமைப்பிற்கு ஒரு இடத்தையாவது வழங்க மறுத்தது வருந்தத்தக்க விடயம் மட்டுமல்ல கண்டிக்கத்தக்கதுமாகும். ஏன் இன்றும் த. தே. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒருசிலர் அவர்களின் பெயரை உச்சரித்தே தங்களின் பாராளுமன்ற பதவியின் இருப்பை தக்கவைத்துக் கொள்ளவிரும்புகின்றனர்.
எம்மைப் பொறுத்தளவில் அவர்கள் சுயேச்சையாக போட்டியிடுவது எதிர்காலத்தில் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சினைகளை எதிர் நோக்க வேண்டி வரும் என நாம் எண்ணுகின்றோம். எனவே அவர்கள் தங்களது முடிவை மீள் பரிசீலனை செய்து எம்முடன் இணைய விரும்பாவிட்டால், ஏதாவது ஒரு பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சியில் இணைந்து போட்டியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தங்களுக்கு போட்டியாக எவரும் செயற்பட்டால் அவர்களை துரோகிகள், அல்லது இராணுவப் புலனாய்வாளர்கள் எனக் கூறுவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு கைவந்த கலை என்பது மட்டுமல்ல புலிகளையும் போர்க் குற்றங்களுக்காக சர்வதேச விசாரணைகளுக்கு உட்படுத்தவேண்டும் என்று கூறியவர்கள் அல்லவா அவர்கள். இவைகள் அனைத்தையும் முன்னாள் போராளிகள் சிந்தித்து செயற்பட வேண்டிய தருணம் இது. முன்னாள் போராளிகளுக்காக தமிழர் விடுதலைக் கூட்டணியின் கதவுகள் என்றும் திறந்தே இருக்கும்.