Breaking News

மைத்திரியின் முடிவினால் சுதந்திரக் கட்சியினர் பலர் ஐதேகவுக்கு தாவத் திட்டம்

மகிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பலர் ஐதேகவில் இணைந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் எஸ்.பி.நாவின்ன தாம் ஐதேகவில் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவர் நாளை ஐதேகவின் வாரியப்பொல தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்படவுள்ளார்.

அதேவேளை, மேலும் பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிக்கப்பட்டத்தால் அதிருப்தி அடைந்துள்ளனர். அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்டோர், கட்சியின் உயர்மட்டத்துடன் தமது அடுத்த கட்ட நகர்வு குறித்து பேச்சு நடத்தி வருகின்றனர்.

இதன்று தமது முடிவை அறிவிக்கப் போவதாக ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். அதேவேளை, அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்த்தனவும், சிறிலங்கா அதிபரின் முடிவினால் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், அவரும் ஐதேகவில் இணைவது அல்லது புதிய கூட்டணி ஒன்றை அமைப்பது குறித்த ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மகிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இடமளிக்கப்பட்டால், சிறிலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த அவரது அதிருப்தியாளர்கள் தனியான அணியாகப் போட்டியிடுவது குறித்தும் ஆராயப்படுகிறது.