சமஷ்டியை கூட்டமைப்பு கோரலாம்! ஒற்றையாட்சி என்ற எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை - ராஜித
இனப்பிரச்சினைக்கு சமஷ்டி அடிப்படையில் தீர்வு அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரலாம். ஆனால் ஒற்றையாட்சியின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வை வழங்குவதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.
அந்த நிலைப்பாட்டிலிருந்து நாங்கள் ஒருபோதும் மாற மாட்டோம் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
ஒரு காலத்தில் சிங்கள மக்கள் சமஷ்டியை கேட்டபோது தமிழ் மக்கள் அதனை எதிர்த்ததுடன் ஒற்றையாட்சியை விரும்பினர். தற்போது தமிழ் மக் கள் சமஷ்டியை கேட்கும்போது அதனை சிங்கள மக்கள் எதிர்க்கின்றனர். ஆனால் இந்த நாட்டுக்கு சமஷ்டி பொருத்தமானது என்று முதன் முதலில் முன்னாள் தலைவர் பண்டாரநாயக்கவே முன்மொழிந்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனப்பிரச்சினைக்கான தீர்வைக் கோரலாம். அவர்கள் நீண்டகாலமாக அதனையே கோரிவருகின்றனர்.
ஆனால் அதனை நாங்கள் ஏற்கவில்லை. ஒற்றையாட்சியின் அடிப்படையில் அதி காரப் பகிர்வை வழங்குவதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். அந்த நிலைப்பாட்டிலிருந்து நாங்கள் ஒருபோதும் மாறமாட்டோம்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆரம்பத்திலிருந்தே இதனைதான கோரிவருகின்றனர். அவர் கள் அதற்காகவே சமஷ்டிக் கட்சியையே ஆரம்பித்தார்கள். எனவே அவர்கள் தேர்தல் காலத்தில் எதனையும் கோரலாம். அதிகமாக கேட்டால்தான் குறைந்த பட்சமாவது கிடைக்கும் என்று கூட்டமைப்புக்கு நன்றாக தெரியும். அதனால்தான் அவ்வாறு கோருகின்றனர்.
இன்று சமஷ்டி என்றால் சிங்கள மக்கள் அச்சப்படுகின்றனர். ஒரு காலத்தில் சிங்கள மக்கள் சமஷ்டியை கேட்டபோது தமிழ் மக்கள் அதனை எதிர்த்ததுடன் ஒற்றையாட்சியை விரும்பினர். தற்போது தமிழ் மக்கள் சமஷ்டியை கேட்கும்போது அதனை சிங்கள மக்கள் எதிர்க்கின்றனர். ஆனால் இந்த நாட்டுக்கு சமஷ்டி பொருத்தமானது என்று முதன் முதலில் முன்னாள் தலைவர் பண்டாரநாயக்கவே முன்மொழிந்தார். அவர் 1953 ஆம் ஆண்டே இந்த யோசனையை முன்வைத்தார். அத்துடன் டொனமூர் யாப்பு காலத்திலிருந்தே இந்த சமஷ்டி குறித்து பேசப்பட்டு வந்துள்ளது.
இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசியலமைபபின் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்குள்ளேயே தனது விஞ்ஞாபனத்தை முன்வைத்துள்ளது. அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த விடயமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு கடந்த அரசாங்கத்தில் என்ன செய்ய முய்சித்தனர் என்று அனைவருக்கும் தெரியும். 13 பிளஸ் கடந்த அரசாங்கத்தில் மஹிந்த ராஜபக்ஷ கூறும்போது அவர்கள் என்ன செய்யப்போகின்றனர் என்று எனக்கு தெரிந்துவிட்டது.
அதனால்தான் 13 ஆவது திருத்தத்துக்கு பிளஸ் மற்றும் மைனஸ் என இரண்டும் தேவையில்லை என்று நான் வலியுறுத்தினேன். காரணம் அவர்களுக்கு பிளஸும் தெரியாது. மைனஸும் தெரியாது. 13 ஆவது திருத்தச் சட்டத்தில் கைவைத்தால் அரசாங்கத்தை விட்டு விலகிவிடுவேன் என்று கடந்த அரசாங்கத்தில் நான் எச்சரிக்கை விடுத்திருந்தேன். அதனால்தான் அவர்கள் அந்த செயற்பாட்டை கைவிட்டனர். அந்தவகையில் கடந்த அரசாங்க காலத்தில் நாங்கள் வெற்றிபெற்றதாகவே கருதுகின்றோம் என்றார்.