ஐ.நா – இலங்கை இடையே இரகசிய இணக்கப்பாடு எதுவும் இல்லை - மஹேஷினி கொலன்னே
சனல் 4 ஊடகம் குறிப்பிட்டது போல, இலங்கை அரசாங்கத்துக்கும் ஐ.நாவுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏதும் இருக்கும் என்று தாம் நம்பவில்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில், ஐ.நா உதவியுடன் உள்நாட்டு விசாரணையை நடத்த ஐ.நாவும், இலங்கையும் இணங்கியுள்ளதாக சனல் 4 வெளியிட்ட செய்தி குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு முதலில் அவர், சனல் 4 வெளியிட்ட ஏதாவது செய்தி குறித்து தாம் கருத்து வெளியிட விரும்பவில்லை என்று தெரிவித்தார் மஹேஷினி கொலன்னே.
அதையடுத்து, ஐ.நாவுடன் அத்தகைய உடன்பாடு எதுவும் செய்து கொள்ளப்பட்டதா என்று எழுப்பப்பட்ட மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், சனல் 4 சித்திரிப்பது போல, எந்தவொரு உடன்பாடும் செய்துகொள்ளப்பட்டிருக்கும் என்று தாம் நம்பவில்லை என்று குறிப்பிட்டார்.
அதேவேளை, ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் ஜெப்ரி பெல்ட்மன் கடந்த மார்ச் மாதம், இலங்கை வந்திருந்த போது, இலங்கைக்கு உதவ ஐ.நா தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையின் கோரிக்கையின்படி, அமைதியைக் கட்டியெழுப்பும் நிதியத்தின் மூலமும், ஏனைய பொருத்தமான வசதிகள் மூலமும், நல்லிணக்கம், மற்றும் பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கு உதவ ஐ.நா கடமைப்பட்டுள்ளது.ஆனால், முதலில் இலங்கையர்கள், கடந்த கால விவகாரங்களுக்கு எவ்வாறு பதிலளிக்கப் போகின்றனர் என்பதை வடிவமைக்க வேண்டும் என்றும் அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா உதவிச் செயலர் கூறியிருந்தார்.
சனல் 4 செய்தி குறித்து மேலதிக கருத்து எதையும் வெளியிட முடியாது. அது ஐ.நா தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. எனவே அதுபற்றிக் கருத்து வெளியிடுவதில் தொடர்புபட வி்ரும்பவில்லை என்றும்இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.