தேர்தலின் பின் ஐ.தே.மு.வுடன் கூட்டமைப்பு இணையும் சாத்தியம்! எதிர்வு கூறுகிறார் சோபித தேரர்
அரசியல் ரீதியாக பொது இணக்கப்பாட்டிற்கு வரமுடியுமானால் பாராளுமன்ற தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் ஒன்றை நிறுவுவதற்கு ஐக்கிய தேசிய முன்னணியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்து கொள்ளும் சாத்தியம் உள்ளது
என நீதியான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்தார்.
அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் வரும் காலங்களில் பொது இணக்கப்பாட்டின் கீழ் தேசிய அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தலின் பின்னர் மக்களின் எமது ஒப்பந்ததை மீறி அரசினால் செயற்பட முடியாது. அதனை மீறி ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் செயற்படுமாயின் மக்களுடன் வீதியில் இறங்குவோம். மக்களுடைய அரசாங்கமே அடுத்து நிறுவப்படுமே ஒழிய தனி கட்சியொன்றின் ஆட்சியல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் குறிப்படுகையில்,
ஜனவரி 8 ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட புரட்சிகரமான வெற்றிக்கு தமிழ், முஸ்லிம் மக்களும் கட்சிகளும் பெருமளவில் பங்காற்றின. அதனை எம்மால் மறந்துவிட்டு செயற்பட முடியாது. ஆகவே அவ்வாறானதொரு போக்கையே இம்முறை பாராளுமன்ற தேர்தலிலும் நாம் எதிர்ப்பார்க்கின்றோம். பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனியாகவே களமிறங்குகின்றது.
இருந்தபோதிலும் நல்லாட்சியை ஏற்படுத்தும் வேலைத்திட்டங்களுக்கு கடந்த பாராளுமன்றத்தின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் இணைந்து செயற்பட முடியுமென்றால் ஐக்கிய தேசிய முன்னணியுடன் தேசிய அரசாங்கம் அமைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு நிச்சியமாக முன்வந்தே தீரும். அந்த நம்பிக்கை எமக்கு உள்ளது.
நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளது. இதற்கான வேலைத்திட்டங்களை அடுத்த பாராளுமன்ற ஆட்சியின் போது நாம் முன்னெடுக்கவுள்ளோம். அது போன்று நாட்டில் அபிவிருத்தியையும் நாம் அவதானிக்க வேண்டியுள்ளது. ஆகவே ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சியின் கீழ் பல்வேறு மாற்றங்களை நாம் செய்ய தயாராகவே உள்ளோம்.
அத்தோடு அரசியல் ரீதியாக பொது இணக்கப்பாடு என்ற விடயம் சாத்தியமாகுமானால் நிச்சியமாக வரும் காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும்.
ஆட்சி மாற்றம்
ஊழல் மோசடிகள், சர்வாதிகார ஆட்சி மற்றும் அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச்சட்டம் உள்ளிட்டவையே ஜனவரி 8 ஆம் திகதி புரட்சிக்கு பெரும் பங்காற்றின. நீண்ட காலமாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்துக்கட்டுவதற்கு நாம் போராட்டம் நடத்தியபோதிலும் எம்மால் எதனையும் வெற்றிக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது நாட்டில் நல்லாட்சியை நிறுவுவதற்காகவே நாம் எதிரணியின் பொது வேட்பாளராக ஒருவரை களமிறக்க திட்டமிட்டோம்.
இதன்பிரகாரம் மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக களமிறக்கி தேர்தலில் வெற்றிக்கொண்டு அவரை ஜனாதிபதி கதிரையில் அமரவைப்பதற்கு எம்மால் முடிந்தது. இந்த வெற்றி ஒரு தனிக்கட்சியின் வெற்றியல்ல. நாட்டு மக்களுக்கு கிடைக்க பெற்ற வெற்றியாகும். இந்த வெற்றியை எவராலும் சொந்தம் கொண்டாட முடியாது.
இதன்பிரகாரம் ஜனவரி 8 ஆம் திகதி ஏற்படுத்திய ஆட்சி மாற்றத்தின் பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தை எம்மால் நிறைவேற்ற முடிந்தது. அதேபோன்று சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவும் செயற்பாட்டிற்கும் உரமூட்ட முடிந்தது.
இருந்தபோதிலும் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்திற்கு பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சிகள் காலைவார முற்பட்டன. எனினும் எமது போராட்டத்தை அடுத்து குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது நாட்டின் அனைத்து துறைகளும் சுயாதீனமாக இயங்க கூடிய சூழல் உருவாகியுள்ளது. இம்முறை தேர்தல் பிரசாரங்கள் அமைதியான முறையில் நடத்தப்படுகின்றது. மோதல்கள் கிடையாது. இது பாரிய மாற்றம். எவராலும் நினைத்து பாரக்க முடியாத அளவிற்கு பதாகைகளினால் அலங்கரிக்கப்பட்ட அரசியல் கலாசாரம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இத்தகைய மாற்றத்தை விட்டுக்கொடுக்க முடியாது. இத்தகைய நல்லாட்சிக்காகவே நாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு நல்கினோம். இந்நிலையில் குறித்த நல்லாட்சியை முன்நகர்த்த கூடிய பலம் ஐக்கிய தேசிய முன்னணிக்கு மாத்திரமே உள்ளது. இதனை தவிர்ந்த மாற்று வழி எமக்கு தெரியாது. ஆகவே 110 அமைப்புக்களுடன் கைச்சாத்திட்ட ஒப்பந்ததினூடாக அடுத்த பாராளுமன்றத்தை நாட்டில் நல்லாட்சியையும் ஜனநாயகத்தையும் ஏற்படுத்த போராடுவோம். இது தொடர்பில் நாம் அவதானத்துடனும் அழுத்தம் பிரயோகிக்கும் சக்தியாகவும் நாம் திகழுவோம்.
எனவே ஜனவரி 8 ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட புரட்சியினூடாக சிறுப்பான்மை அரசாங்கம் என்ற வகையில் நிறைவேற்றுவதற்கு கடினமாக இருந்த பல்வேறு நல்லாட்சி திட்டங்களை நாம் அடுத்த ஐக்கிய தேசியக் முன்னணியின் ஆட்சியின் கீழ் நிறைவேற்றுவதற்கு தயாராக உள்ளோம். இதற்கமையவே நாம் ஒப்பந்தம் கைச்சாத்திட்டோம்.
எனினும் மக்களின் ஆணைக்கு மதிப்பளித்து செயற்பட கூடியவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் மக்களுக்கு துரோகம் செய்ய மாட்டார்கள். ஆகவே இந்த நம்பிக்கையின் பிரகாரமே நாம் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு நல்கினோம். எனவே அடுத்த பாராளுமன்றத்தில் மலரவுள்ள ஆட்சியும் பொது இணக்கப்பாட்டின் கீழ் ஏற்படுத்தப்பட்ட ஆட்சியாகும். இந்த ஆட்சிக்கும் எந்த தனிக்கட்சியும் சொந்தம் கொண்டாட முடியாது.
கோரிக்கை
அதேபோன்று இம்முறை தேர்தலிலும் பழைய திருடர்களின் முகங்கள் கண்களுக்கு புலப்படுகின்றன. போதைப்பொருள் வர்த்தகர்கள், மோசடிக்கார்கள்,கொள்ளைக்கார்களுக்கு தேர்தலின் போது வேட்புமனு வழங்க மாட்டோம் என்று மார்ச் கொள்கை பிரகடணத்திற்கு அரசியல்கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்ட போதிலும், இந்த தேர்தலிலும் திருடர்களின் முகங்களை நாம் அவதானிக்கின்றோம்.
இந்நிலையில் தற்போது மக்களுக்கு அறிய சந்தர்ப்பம் கிடைக்கபெற்றுள்ளது. இந்த தேர்தலில் மக்களின் பணங்களை கொள்ளையிட கூடியவர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யகூடாது. பாராளுமன்றம் என்பது சட்டவாக்க மன்றமாகும். போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையோர் பாராளுமன்ற தெரிவானால் அவர்களுக்கு எவ்வாறு சட்டவாக்கம் தொடர்பில் பொறுப்புணர்வுடன் செயற்பட முடியும். அவர்களின் தொழிலுக்கு சாதகமான முறையில்மாத்திரமே சட்டங்களை நிறைவேற்ற முடியும்.
ஆகவே இது தொடர்பில் மக்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்றார்.