ஐ.நா விசாரணையை உள்ளக விசாரணையாக முடக்கியது ததேகூ தான்!
ஐ.நா விசாரணையினை உள்ளக விசாரணையாக முடக்கியது தமிழ் தேசிய கூட்டமைப்பே என, தமிழ் தேசிய மக்கள் முண்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று வியாழக்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஐ.நா விசாரணை தமிழ் மக்களுக்கு நீதியாக அமையாது என சனல் 4 வெளியிட்டுள்ள செய்திக்கு கருத்து தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளக விசாரணைக்கு தயார் என பகிரங்கமாகவே கூறியிருக்கின்றார்கள். இலங்கையில் உள்ளக விசாரணையினை நடாத்துவதன் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்குமா? என்ற கோள்வி எழுகிறது. அரசாங்கம் மாறியதுடன், உள்ளக விசாரணையினை வலியுறுத்துவதன் ஊடாக தமிழ் மக்களுக்கு நன்மை கிடைக்குமா என்பது முக்கியமான ஒரு கேள்வி.
தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களுக்கு முன் சொல்லும் கருத்து யாதெனில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் பிரச்சினை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவோ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவோ இல்லை.
தற்போதைய தேர்தல் காலத்திலும், நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் நல்லாட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் கருத்து.
தேர்தலின் பின்னர் மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்கிரமசிங்க கூட்டணியும் அரசாங்கம் அமைக்கும் போது, தமிழ் மக்களுக்கு பொறுப்புக் கூறல் உள்ளக விசாரணையின் ஊடாக நடைபெறுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் ஓற்றை ஆட்சியில் தீர்வு என்ற விடயத்தினை சிங்கள தரப்புகள் முன்வைத்து தேர்தலில் வாக்கு கேட்கின்றார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு சமஷ்டி என்று பேருக்கு கதைப்பது, கடந்த 5 வருடங்களாக சமஷ்டியை பற்றி கதைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களிடம் வாக்கினைப் பெற்று, தேர்தலின் பின்னர் ஒற்றை ஆட்சியை கோரியிருக்கின்ற ஐக்கிய தேசிய கட்சிக்கும், மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஆதரவினை கொடுக்கப்போவதே உண்மை என்றும் சுட்டிக்காட்டினார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் பிரச்சினை என கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு உண்மையை சொல்கின்றதாக என்றும், தமிழ் மக்கள் தேர்தல் காலத்தில் வாக்குகளை பெறுவதற்கு அபட்டமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறும் கருத்துக்களை கவனத்தில் எடுக்க வேண்டும்.
65 வருடங்களாக தமிழ் மக்கள் அழிக்கப்பட்டமைக்கு தீர்வு காண்பதென்றால், உடனடியாக நிரந்தர தீர்வு ஒன்றினை எட்ட வேண்டும்.
இலங்கை நாட்டிற்குள் இரண்டு தேசம் என்ற கோணத்தில் தீர்வு அமைய வேண்டும். எந்தவித அடிப்படையும் இல்லாத அதிகார பகிர்வின் ஊடாக எதையும் பெற முடியாது.
உள்ளக விசாரணை என்பதும் அதற்குரிய முழுப் பொறுப்பினையும் உள்ளக விசாரணைக்குள் கொண்டு வந்து முடக்கியதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பே பொறுப்பேற்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.