மும்பை குண்டுவெடிப்பு வழக்கு! தூக்கிலிடப்பட்டார் யாகூப் மேமன்
மரணதண்டனை விதிக்கப்பட்ட யாகூப் மேமனுக்கு இன்று காலை 6.30 மணியளவில் நாக்பூர் சிறைச்சாலையில் மரணதண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது.
இந்திய உச்சநீதிமன்றத்தில் இன்று அதிகாலையில் நடந்த நீண்ட சட்டப் போராட்டத்தின் பின்னர் அவரது மரணதண்டனை உறுதி செய்யப்பட்டதையடுத்தே, இன்றுகாலை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.\
1993ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் நாள் மும்பையில், 13 இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 257 பேர் கொல்லப்பட்டு,713 பேர் காயமடைந்தனர்.இந்த வழக்கில் பிரதான குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட யாகூப் மேமனுக்கு, இந்திய உச்ச நீதிமன்றம் மரணதண்டனையை உறுதி செய்திருந்தது.
அவர் இந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும், ஆளுனருக்கு அனுப்பிய கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதையடுத்து, நேற்றிரவு இந்திய உச்சநீதிமன்றில் 14 நாட்களுக்கு தண்டனையை நிறைவேற்றுவதை பிற்போடுமாறு அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.இதையடுத்து, இந்திய வரலாற்றில் முதல் முறையாக இன்று அதிகாலை 2 மணிக்கு இந்திய உச்சநீதிமன்றத்தில் இந்த மனு விவாதிக்கப்பட்டது.
இந்த விசாரணைகளின் முடிவில் இன்று அதிகாலை 5 மணியளவில் யாகூப் மேமனுக்கு மரணதண்டனை நிறைவேற்ற தடையில்லை என்று அறிவித்தது உச்சநீதிமன்றம்.இதையடுத்து இன்று காலை 6.30 மணியளவில் யாகூப் மேமனுக்கு – அவர் பிறந்த நாளிலேயே நாக்பூர் சிறையில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் மனித உரிமை ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.