மகிந்தவைத் தோற்கடிப்பதற்கு தயார் – பொன்சேகா சவால்
மகிந்த ராஜபக்சவும் அவரது உதவியாளர்களும் மீண்டும் அதிகாரத்துக்கு வரக் கூடிய அச்சுறுத்தல் எழுந்தால், அவரைத் தோற்கடிப்பதற்காக கூட்டணி அமைக்கத் தயார் என்று ஜனநாயக கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா. இந்த நிலையில் மீண்டும் மகிந்த ராஜபக்ச தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள நிலையில், அவரைத் தோற்கடிக்க கூட்டணி அமைப்பதற்குத் தயார் என்று கூறியிருக்கிறார்.
நேற்று கட்சியின் புதிய அமைப்பாளர்களுக்கு நியமனங்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தனித்துப் போட்டியிடும் தமது நிலைப்பாட்டை மாற்றியமைப்பதற்கான ஒரு சூழ்நிலை இதுவாகத் தான் இருக்கும் என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கூட்டணி அமைப்பது குறித்து பேச்சு நடத்த ஐதேக தவிசாளர் மலிக் சமரவிக்கிரமவிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்குள் அங்கு சென்று பேச்சு நடத்துவேன்.
எவ்வாறாயினும் எமது நிலைப்பாடு உறுதியானது. எமது முடிவை அவர்களுக்குத் தெரியப்படுத்துவேன். எம்மால் குறைந்தது ஒரு மில்லியன் வாக்குகளை பெறமுடியும் என்று நாம் நம்புகிறோம். 20 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற முடியும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.