Breaking News

சம்பூர் காணி விடுவிப்பு கூட்டமைப்பின் தேர்தல் வெற்றிக்கு முதற்படி என்கிறார் சம்பந்தன்!

சம்பூர் காணிப் பிரச்சினை தொடர்பாக உயர் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் வழங்கிய தீர்ப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் வெற்றிக்கான முதற்படியாகும் என்று தெரிவித்துள்ளார் 




தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன்.

திருகோணமலை மாவட்டத்தில் சம்பூரில் மக்களின் மீள்குடியமர்வுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கு நேற்றுமுன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் அவர்களது சொந்த மண்ணில் உடனடியாக மீளக்குடியமர முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் வழங்கிய தீர்ப்பை சம்பூர் மக்களுக்குத் தெளிவுபடுத்தும் கூட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக நேற்று சனிக்கிழமை சம்பூர் காளிகோவில் முன்றிலில் நடைபெற்றது.

அங்கு உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்ததாவது:-

சம்பூர் காணிப் பிரச்சினை தொடர்பாக உயர் நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் வெற்றிக்கான முதல் மணியாகும். பத்து வருடங்களாக சம்பூர் மக்கள் அனுபவித்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முடிவு கிடைத்துள்ளது – என்றார்.

தேர்தல் வேட்புமனுவை தாக்கல் செய்த பின் திருகோணமலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற முதலாவது கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண அமைச்சர்களான சி.தண்டாயுதபாணி, கி.துரைராஜசிங்கம், கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பு சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.