வடகிழக்கு இணைந்த தனிநாடே சம்பந்தனின் எதிர்பார்ப்பாகும்! பின்னணியில் ரணிலும் சம்பிக்கவும்
வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு மீண் டும் உயிர்கொடுக்கும் வகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்துள்ளது. வடக்கு, கிழக்கு இணைந்த தனிநாடே சம்பந்தனின் எதிர்பார்ப்பு என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
சம்பந்தனின் தனிநாட்டுக் கோரிக்கையின் பின்னணியில் ரணிலும், சம்பிக்கவுமே உள்ளனர். இல்லையெனின் அதனை உடனடியாக நிரூபிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் நேற்று எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தேசிய ஒற்றுமைக்கு பாதகமான ஒன்றாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்த விஞ்ஞாபனம் மிகவும் மோசமானதாகவே அமைந்துள்ளது. கடந்த காலத்தில் நாட்டில் நெருக்கடியாகவும், தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய அபிவிருத்திக்கு பாதகமாக இருந்த விடுதலைப்புலிகள் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் சாமாதானத்தையும், தேசிய ஒற்றுமையினையும் எமது அரசாங்கம் பலப்படுத்தியது. அந்த சமாதானமும் தேசிய ஒற்றுமையும் முழுமையாக அழிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செயற்பட ஆரம்பித்துள்ளனர்.
குறிப்பாக வடக்கு,கிழக்கு இணைந்த தமிழக தாயகக் கோரிக்கையும், அப்பகுதிகளில் தமிழ் மொழியை பிரதான மொழியாக்கும் நடவடிக்கையும், வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் தனி பொலிஸ் அதிகாரங்கள், 13க்கு அப்பாலான ஒரு அரசியல் தீர்வும், பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளை விடுவித்தல், ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கையினை வெளியிடுவதும், இலங்கையின் போர்க் குற்ற செயற்பாடுகளை முழுமையாக முன்னெடுக்கக் கோரியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது நிலைப்பாட்டினை முன்வைத்துள்ளது.
கடந்த முப்பது ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டை சமாதானத்தின் பாதையில் கொண்டுவர எமது இராணுவ வீரர்கள் பல தியாகங்களை மேற்கொண்டனர். ஆனால் இந்த நாட்டை பிரிவினைக்குள் கொண்டு சென்ற விடுதலைப் புலிகளை பாதுகாக்கவும் இராணுவத்தை தண்டிக்கவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முழு முயற்சியை மேற்கொள்கின்றனர். அதேபோல் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை உருவாக்குவதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரே நோக்கமாகும்.
நாட்டை பிரிவினையின் பாதையில் கொண்டு சென்ற, வடக்குக் கிழக்கை தனி நாடாக்க முயற்சித்த மற்றும் நாட்டில் சிங்கள,முஸ்லிம் மக்களை மட்டும் இல்லாது தமிழ் மக்களையும் கொன்று குவித்த விடுதலைப் புலிகளுக்காக ஆதரவுக் குரல் கொடுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மறுபுறம் இலங்கை இராணுவத்தையும் மஹிந்த கூட்டணியையும் தூக்கு மேடைக்கு அனுப்பும் பாரிய வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்கின்றனர். அதேபோல் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு சர்வதேச தரப்பிடமே உள்ளது எனவும் அவர்களது ஒத்துழைப்பு இல்லாது செயற்பட முடியாதெனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீண்டும் வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்கொண்டுவந்து தமது பிரிவினைக்கான பலமான பாலத்தை போடவே முயற்சிக்கின்றனர். வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் உயிர் கொடுத்துள்ளது. தமிழர் தாயகம் என்பது சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலட்சியமாக மாறியுள்ளது. ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவை தெரிவிக்கின்றதா? இல்லையா ? என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டும். அதேபோல் கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள் பயங்கரவாத இயக்கத்துக்கு எதிராக குரல் கொடுத்த ஜாதிக ஹெல உறுமைய எவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளது என்பதையும் தெரிவிக்க வேண்டும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஜாதிக ஹெல உறுமையவும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டனர். அதேபோல் தேசிய நிறைவேற்று சபையில் சம்பந்தனும், சம்பிக்கவும் முக்கிய உறுப்பினர்களாக செயற்பட்டனர். ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேலைத்திட்டம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். ஆகவே இவர்கள் அனைவரும் பிரிவினை வாதிகள் என்பது உறுதியாகிவிட்டது.
கடந்த காலத்தில் நாம் தமிழர் மனங்களை வென்றெடுக்க பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம். யுத்தத்துக்கு பின்னரான காலப்பகுதியில் நாம் தமிழ் மக்களை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் வேலைத்திட்டம் அவ்வாறானதொன்று அல்ல. அவர்கள் மீண்டும் நாட்டை பிரிவினையின் பாதையில் கொண்டுசெல்லவே முயற்சிக்கின்றனர்.
ரணில் விக்கிரமசிங்க எப்போதும் புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்தவே முயற்சிக்கின்றார். சர்வதேச புலிகள் அமைப்புகளையும், புலம்பெயர் தமிழர்களையும் திருப்திப்படுத்த சிங்கள மக்களை தண்டிக்கப் பார்கின்றார். ஆகவே மக்கள் இப்போது சரியான முடிவினை எடுக்க வேண்டும். இந்த நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஆட்சிக்கு வாக்களிப்பதா, அல்லது நாட்டை பிரிவினையின் பாதியில் கொண்டு செல்லும் ஆட்சிக்கு வாக்களிப்பதா என்ற தீர்மானம் மக்களின் கைகளில் தான் உள்ளது எனக் குறிப்பிட்டார்.