இலங்கை அரசுடன் இணைந்து இன அழிப்புக்குத் துணை போனவர்களை தமிழ் மக்கள் புறக்கணிப்பர்!
இலங்கையின் ஆட்சியாளர்களுடன் இணைந்து தமிழ் இனத்தின் மீது காலத்திற்கு காலம் நடத்தப்பட்ட இன அழிப்புக்கு வெளிப்படையாகத் துணை போனவர்களை எப்போதும் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் நிராகரிப்பார்கள்.
இதேவேளை பேச்சில் தமிழ்த் தேசியத்தை வைத்துக் கொண்டு செயற்பாட்டில் இலங்கையின் ஒற்றையாட்சிக்குள் தமிழ் இனத்தையே முடக்க நினைக்கிறது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பை விமர்சிக்கிறது என கேட்பவர்களுக்கு சொல்ல வேண்டும். வெளிப்படையான எதிரியை, தமிழ் மக்களின் ஒட்டு மொத்த அங்கீகாரத்தை பெறாதவர்களை நாம் விமர்சிக்க வேண்டுமா? அல்லது நாம் இரத்தம் சிந்தி, உயிர் விலை கொடுத்து எங்கள் அடிமனதில் பதித்திருக்கும் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற கோட்பாட்டை விற்பவர்களை விமர்சிக்க வேண்டுமா? இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழ்த் தேசிய கூட்டமைப்பை மட்டும் விமர்சிப்பதன் ஊடாக மற்றைய ஈ.பி.டி.பி மற்றும் சிங்கள கட்சிகளுக்கு சாதகமான சூழலை உருவாக்குகின்றது. என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக கருத்து தெரிவிக்கும்பேதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்:-
ஈ.பி.டி.பியாக இருக்கலாம், கருணா குழுவாக இருக்கலாம், சிங்கள கட்சிகளான ஐ.தே.கட்சியாகவோ, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியாகவோ இருக்கலாம். அவற்றை எங்கள் மக்கள் என்றைக்கும் ஒட்டுமொத்தமாக அங்கீகரிக்கப் போவதில்லை. கடந்த 60 வருடங்கள் தமிழ் மக்கள் ஜனநாயக வழியிலும், ஆயுதப் போராட்ட வழியிலும், செய்யாத தியாகங்கள் இல்லை. இரத்தம் சிந்தியிருக்கிறோம்.
பல்லாயிரம், பல லட்சம் உயிர்களை தியாகம் செய்திருக்கின்றோம். பெருமள சொத்துக்களை இழந்து இன்றளவும் ஏதிலிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவை அனைத்தும் எதற்காக? தமிழ் மக்கள் இன்றளவும் தங்கள் மனங்களிலே விதைத்திருக்கின்ற தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அடிப்படை கோட்பாடுகளுக்காகவே என்றால் அதனை யாரும் மறுக்க முடியுமா? ஆனால் கூட்டமைப்பு என்ன செய்தது? நாங்கள் 2010ம் ஆண்டு சொன்னோம் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் அனைத்தும் விட்டாயிற்று இந்தியா சொல்வதற்கு இணங்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 13 ஆம் திருத்தச் சட்டத்தை ஆதரித்து இலங்கையின் ஒற்றை ஆட்சிக்குள் முடக்குகிறது.
விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்றார்கள், சர்வதேச விசாரணை வேண்டாம் என்றார்கள், சிங்கள கொடியை சுமந்தார்கள், இலங்கையின் சுதந்திர தினத்தில் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் தமிழர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்? 60 வருடங்கள் சுயத்திற்காக போராடிய ஒரு இனம் உலகத்தில் எங்கள் அளவு தொகை கொண்ட எந்தவெரு இனமும் செய்திருக்காத உயிர்கொடையை, தியாகங்களை செய்த ஒரு இனம்.
உலகத்தின் மனிதநேயம் கண்களை மூடும்படி ஒரு அழிவை கண்டதன் பின்னரும் எழுந்து தனக்கு சுதந்திரம் வேண்டும் என கேட்ட ஒரு இனத்தை அடையாளமே தெரியமல் அழிப்பதற்கு தமிழ்த் தேசியத்தை பேசிக் கொண்டு அலைந்து திரியும் இந்த ஓநாய்களை விமர்சிப்பது தவறு அல்லது துரோகம் என்றால் அந்த தவறை அந்த துரோகத்தை நாங்கள் தொடர்ந்தும் செய்வோம் - என்றார்.