ஐ.ம.சு.மு.வின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று
“நாட்டுக்கு உயிரூட்டுவோம் – புதிகாக ஆரம்பிப்போம்” எனும் தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று கொழும்பில் வெளியிடப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டுபிரதான கட்சிகள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வருகின்றன. இதில் ஐக்கிய தேசியக் கட்சி “அறுபது மாதங்களில் ஐந்து அம்சக் கோரிக்கை” எனும் தொனிப்பொருளில் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டது.
அதேபோல் மக்கள் விடுதலை முன்னணியும் “நாட்டின் மனசாட்சி ” எனும் தொனிப்பொருளில் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தமது தேர்தல் விஞ்ஞாபனதை கடந்த சனிக்கிழமை வெளியிட்டிருந்தனர். இந் நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று கொழும்பில் வெ ளியிடுகின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரச்சாரத் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் தலைமையில் நடைபெறும் இந்த தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்கள் மற்றும் கூட்டணியின் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். இன்று காலை 9 மணிக்கு கொழும்பு ௦5 இல் அமைந்துள்ள ஹென்றி பெட்ரிஸ் மைத்தானத்தில் இந்த நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.
அதேவேளை காலை 08.30 மணி அளவில் கொழும்பு 07 இல் அமைந்துள்ள ஆர்கேய்ட் அரங்கில் மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் இளைஞர் செயற்திட்ட நிகழ்வொன்றும் நடைபெறவுள்ளது. நாட்டின் இளைஞர்களுக்கான சிறப்பு வேலைத்திட்டம் ஒன்றினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மேற்கொள்ளவுள்ளார்.
அதேபோல் மஹிந்த ராஜபக் ஷவினால் “நாட்டுக்கு உயிரூட்டுவோம் – புதிகாக ஆரம்பிப்போம்” எனும் தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனமும் வெளியிடப்படவுள்ளது. தேர்தலின் பின்னரான ஆறு ஆண்டு காலத்தில் நாட்டில் முன்னெடுக்கவுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் மக்களுக்கான வேலைத்திட்டம் என்பன இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.