மலேசியா செல்ல முயன்ற விடுதலைப் புலி உறுப்பினர் திருச்சியில் கைது
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவர் திருச்சியிலிருந்து விமானம் மூலம் மலேசியாவுக்குத் தப்ப முயன்றபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் இந்திய ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு,
விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சிலர் திருச்சி சுப்பிரமணியபுரம் ஜெய் லானியா தெருவில் ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக நேற்று முன்தினம் இரவு பொலிஸுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பொலிஸ் பொறுப்பதிகாரி உமாசங்கர் தலைமையிலான குழு சோதனையிட்டனர்.
அங்கிருந்த இலங்கை யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த குமரகுரு (39) என்பவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவர் என்பதும், விமானம் மூலம் நேற்று காலை மலேசியாவுக்கு தப்பிச் செல்லத் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.
இதற்கான போலி கடவுச்சீட்டு பெறவும், வெளிநாடு தப்புவதற்கும் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகேயுள்ள உப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் (37), சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த முபாரக் அலி(43) ஆகியோர் உதவியதும் தெரியவந்தது. நேற்று காலை குமரகுருவை வழியனுப்பு வதற்காக திருச்சி விமான நிலையம் வந்த திருமுருகனைப் பொலிஸார் பிடித்தனர்.
போலி ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டு பெற்றது, அனுமதியின்றி இந்தியாவுக்குள் தங்கி யிருந்தது உள்ளிட்ட 6 பிரிவு களின்கீழ் திருச்சி விமான நிலைய பொலிஸார் குமரகுருவை நேற்று கைது செய்தனர். உடந்தையாக இருந்ததாக வழக்கறிஞர் திருமுருகனும் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து பொலிஸ் தரப்பில் கூறியது: விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 1992-ம் ஆண்டு முதல் 1997 வரை குமரகுரு கள வீரராக இருந்துள்ளார். யுத்தத்தில் அவரது வலது கால் முற்றிலும் துண்டாகிவிட்டதால், செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது. அதற்கு பிறகு விடுதலைப் புலிகள் நடத்திய தமிழீழ நிதித் துறை அலுவலகத்தில் வரவேற்பாளராகப் பணியாற்றியுள்ளார். இறுதி யுத்தத்தின்போது இலங்கை ராணுவத்திடம் சிக்கிய இவர், 2009 முதல் 2012-ம் ஆண்டு வரை இலங்கையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
குடும்பத்தினரின் முயற்சியால் விடுதலையான குமரகுரு, சிகிச்சை பெறுவதற்காக சுற்றுலா விசாவில் தனது மனைவி சுதர்ஷினியுடன் கடந்த 2014 ஜனவரி 21-ம் திகதி சென்னை வந்துள்ளார். ஈக்காட்டுத்தாங்கலில் வாடகை வீட்டில் தங்கியிருந்த இவர், 21.7.2014-ல் மனைவியை மீண்டும் இலங்கைக்கு அனுப்பிவிட்டார். ஆனால் அவர் தமிழகத்திலேயே தங்கிவிட்டார்.
இதற்கிடையில், ஒரு தமிழ் அமைப்பு நிர்வாகியின் அறிமுகம் கிடைத்தது. அவர் மூலம் மற்றொரு அமைப்பின் நிர்வாகியான வழக் கறிஞர் திருமுருகனின் பழக் கமும் கிடைத்தது. அவரிடம், சுவிட்சர்லாந்து செல்ல உதவு மாறு குமரகுரு கோரிக்கை விடுத்துள்ளார்.
இருவரும் மயிலாப்பூர் கச்சேரி சாலையில் கூரியர் கார்கோ, போக்குவரத்து முகவர் நடத்திவந்த முபராக் அலியை சந்தித்து உதவி கோரியுள்ளனர். பின்னர், ராமநாதபுரம் பாம்பனைச் சேர்ந்த அலங்காரம் மகன் ஆரோக் கியதாஸ் என்ற பெயரில் போலி கடவுச்சீட்டு தயார் செய்யப்பட்டது.
இதைப் பயன்படுத்தி திருச்சியிலிருந்து மலேசியா வழியாக சுவிட்சர்லாந்து செல்லத் திட்டமிட்ட குமரகுரு, கடந்த 25-ம் திகதி திருச்சி வந்தார். சுப்பிரமணியபுரத்தில் உள்ள வீட்டில் தங்கிய அவர், நேற்று (ஜூலை 26) காலை 7 மணிக்கு மலேசியா செல்லும் விமானத்தில் தப்பத் திட்டமிட்டிருந்தார். அதற்குள் அவரைக் கைது செய்து விட்டோம் என்றனர்.
இந்நிலையில், குமரகுருவுக்கு போலி கடவுச்சீட்டு கிடைக்க உதவிய முபாரக் அலியும் பொலிஸ் பிடியில் சிக்கியுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் உச்சிப்புளியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், திருச்சியில் மேலும் ஒருவர் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
‘இலங்கை சென்றால் மரணம் நிச்சயம்’
பொலிஸார் மேலும் கூறும்போது, “சுவிட்சர்லாந்து நாட்டு தூதரகத்துக்கு குமரகுரு எழுதிய கடிதத்தின் நகலை கைப்பற்றியுள்ளோம். அதில், நான் இலங்கைக்கு திரும்பிச் சென்றால் ராணுவத்தினரால் மரணம் நிச்சயம். எனவே, அங்கு செல்ல முடியாத நிலையில் உள்ளேன். போரில் ஒரு காலை இழந்து விட்டதால் பிழைப்புக்கு வழியின்றி இந்தியாவில் தவிக்கிறேன். எனவே, தங்கள் நாட்டில் அகதியாக அடைக்கலம் கொடுத்து உதவ வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்தும் அவரிடம் விசாரித்து வருகிறோம்” என்றனர்.