சர்வதேச விசாரணைக்கு மஹிந்தவே வித்திட்டார்! நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ
ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு முனனாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே வித்திட்டார். அதனை எதிர் கொள்வது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு ஒருவிடயமேயல்ல என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கணடவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தற்போது சர்வதேச விசாரணைக்கு முகம்கொடுக்க அஞ்சுகின்ற போதும் கடந்த காலங்களில் அவரே சர்வதேச விசாரணைக்கான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டு விசாரணைக்கு வித்திட்டார். அதன் பலனாகவே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவும் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டது.
இது தொடர்பில் குற்றமிழைத்த முன்னாள் ஜனாதிபதிக்கு அச்சமிருந்த போதும் ஐக்கிய தேசிய கட்சிக்கு அது ஒரு பொருட்டல்ல. போர்க்குற்றம், மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் ஒருபோதும் ஈடுபடவில்லை என்பதால் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் சர்வதேச விசாரணைக்கு முகம் கொடுக்க தயாராகவே உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சர்வதேச விசாரணைக்கு நாட்டை முகம் கொடுக்கச்செய்ததுடன் ஐக்கிய தேசியக் கட்சி நாட்டை பொறுப்பேற்ற போது அதனை போதைப்பொருள் மத்தியஸ்தானமாக மாற்றி யிருந்தார்.
அதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் பாதுகாப்பு செயற்பாடுக ளினால் நாட்டில் இருந்து போதைப் பொருள் வர்த்தகம் கணிசமான அளவு குறைக்கப்பட்ட போதும் தற்போதும் நாட்டில். போதைப்பொருள் வர்தகம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டே வருகிறது. போதைப்பொருள் வர்த்தகம் இன் னும் உள்ளமையினாலலேயே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வெற்றிவாய்ப்பும் இன்று கணிசமான அளவு குறைந்து போயுள்ளது.
எவ்வாறாயினும் இனிவரும் காலங்களில் நாட்டை சர்வதேச விசாரணையொன்றுக்கு முகம்கொடுக்க செய்யாத ஆட்சியொன்றினை உருவாக்குவது நாட்டு மக்களின் பொறுப்பாகும் என்றார்.