கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தை கடுமையாக எதிர்க்கின்றது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
தேசிய ஒற்றுமையை முழுமையாக சீரழித்து நாட்டை பிரிவினையின் பாதையில் கொண்டுசெல்லும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்துள்ளது.
இவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தை முழுமையாக எதிர்ப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி தமது நிலைப்பாட்டை பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரினர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் நேற்று எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின்போதே முன்னணியின் பிரதி நிதிகள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
இதில் கலந்துகொண்டிருந்த திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர் தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விஞ்ஞாபனம் மிகவும் மோசமானதாகவே அமைந்துள்ளது. நாட்டில் வென்றெடுத்த சாமாதானத்தையும், தேசிய ஒற்றுமையினையும் முழுமையாக அழிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் திட்டம் தீட்டியுள்ளமை வெளிப்பட்டுள்ளது.
குறிப்பாக வடக்கு,கிழக்கு இணைந்த தமிழக தாயகக் கோரிக்கை, 13 ஆவது திருத்தத்திற்கு அப்பாலான ஒரு அரசியல் தீர்வு, பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளை விடுவிக்கக் கோரல் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கையினை வெளியிடுதல் இலங்கையின் போர்க் குற்ற செயற்பாடுகளை முழுமையாக முன்னெடுக்கக் கோருதல் என்பன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இது தவிர்ந்து வேறு சில காரணங்களையும் இவர்கள் குறிப்பிட்டிருந்தாலும் இந்த முக்கியமான நான்கு விடயங்களும் நாட்டை பாதிக்கும் விடயங்களாகும்.
கடந்த முப்பது ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டை சமாதானத்தின் பாதையில் கொண்டுவர எமது இராணுவ வீரர்கள் பல தியாகங்களை மேற்கொண்டனர். ஆனால் இந்த நாட்டை பிரிவினைக்குள் கொண்டு சென்ற விடுதலைப் புலிகளை பாதுகாக்கவும் இராணுவத்தை தண்டிக்கவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முயற்சித்து வருகின்றனர். அதேபோல் இவர்களது சுய நிர்ணய உரிமையின் நோக்கம் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் மட்டுமேயாகும். இதன் மூலமாக நாட்டில் பிரிவினையினை ஏற்படுத்துவதே இவர்களது பிரதான நோக்கமாகும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேத்தல் விஞ்ஞாபனம் மூலம் இவர்கள் முன்வைத்திருக்கும் காரணங்கள் இப்போது தேர்தலுக்காக முன்வைக்கப்பட்டவையல்ல. இவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையினை கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதே திட்டமிட்டு அதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளனர். ஆகவே நான் அன்று குறிப்பிட்ட விடயம் இன்று உண்மையாகிவிட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நோக்கம் வடக்கையும் கிழக்கையும் இணைப்பதும் அதன்பின்னர் 1983ஆம் ஆண்டுக்கு முன்னர் அங்கு இருந்த நிலைமைகளை ஏற்படுத்துவதுமேயாகும். அவர்களுக்கென்ற தனி பொலிஸ் அதிகாரங்களையும் அவர்களுக்கான சட்டதிட்டங்களையும் முன்னெடுத்து தனி அரசாங்கம் நடத்தும் திட்டத்தை மீண்டும் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்னெடுத்துள்ளனர்.
ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும், அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அதுரலியே ரதன தேரரும்,மாதுலுவாவே சோபித தேரரும் தமது நிலைப்பாட்டினை அறிவிக்க வேண்டும். சம்பந்தனின் நிலைப்பாட்டை இவர்கள் அனைவரும் ஏற்கின்றார்களா என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். என்றார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் டிலான பெரேரா தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முழுமையாக எதிர்க்கின்றது. நாட்டை பிரிக்கும் வேலைத்திட்டத்துக்கு நாம் ஒருபோதும் அதரவு தெரிவிக்க மாட்டோம். அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் நெருங்கிய உறவுமுறை உள்ளது. அவர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளனர். ஆகவே மக்கள் இப்போதாவாது நாட்டின் நிலைமையை சிந்தித்து நாட்டை ஒன்றிணைக்கும் அணியின் பக்கம் கைகோர்க்க வேண்டும்.
கேள்வி:- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பை இணைத்துக்கொள்ளும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் எதுவும் உள்ளதா?
பதில் - தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்த தாயாராக இல்லை. அவர்கள் எம்முடன் கைகோர்க்க வரமாட்டார்கள். யுத்தத்தை வென்றெடுத்த, வடக்கின் பாதுகாப்பை நிலைநாட்டிய மஹிந்தவை அவர்களுக்கு பிடிக்காது. ஆனால் நாட்டில் தமிழர்கள் இரண்டாம் பிரஜைகள் சிங்கள மக்களுக்கே முன்னுரிமை என பகிரங்கமாக தெரிவித்த சரத் பொன்சேகாவுக்கு வாகளித்தனர்.
மஹிந்தவை பழிவாங்குவதற்காக தமிழ் மக்களை எந்த நிலைமைக்கும் கொண்டுசெல்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக உள்ளது. தமிழ் மக்களின் ஆதரவை இவர்கள் முழுமையாக தவறான வகையில் பயன்படுத்துகின்றனர்.