மகிந்தவின் மேடையில் ஏறிய மைத்திரியின் அமைச்சருக்கு நேர்ந்த அவமானம்
மகிந்த ராஜபக்சவின் மேடையில் ஏறிய மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளரான கலை மற்றும் கலாசார அமைச்சர் நந்திமித்ர எக்கநாயக்க, அவமானப்பட நேர்ந்துள்ளது.
மாத்தளை மாவட்டத்தில் உள்ள நா-உலவில் நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தேர்தல் பரப்புரைப் பேரணி நடைபெற்றது. இதில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில், அமைச்சர் நந்திமித்ர எக்கநாயக்கவும் கலந்து கொண்டார்.
அவர் மேடையில் ஏறியதும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிய ஆதரவாளர்கள் கூக்குரலிட்டு எதிர்ப்புத் தெரிவித்தனர். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக, பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை விட்டுச் சென்றவர்களில் நந்திமித்ர எக்கநாயக்கவும் ஒருவர்.
எனினும் அவர் தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மாத்தளை மாவட்டத்தில் போட்டியிடுகிறார். இதனாலேயே அவருக்கு கூக்குரலிட்டு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பொருட்படுத்தாமல், நந்தி மித்ர எக்கநாயக்க உரையாற்றத் தொடங்கினார்.
அப்போது மகிந்த ராஜபக்சவும், ஜனக பண்டார தென்னக்கோனும் கூக்குரலிடாமல் அமைதியாக இருக்கும் படி சைகை செய்தனர். ஆனாலும், தொடர்ந்து கூக்குரல் இடப்பட்டதால், மகிந்த ராஜபக்சவின் முகம் கோபத்தில் சிவந்து போனதுடன், தனது உரையை சுருக்கமாக முடித்துக் கொண்டார் நந்திமித்ர எக்கநாயக்க.