Breaking News

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரும் அதிகாரப்பகிர்வுக்கு இடமில்லை – என்கிறார் மகிந்த

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், கூட்டமைப்பு அதிகாரப்பகிர்வைக் கோரினாலும், நாட்டைப் பிரிக்க ஐக்கிய மக்கள் கூந்திர முன்னணி இடமளிக்காது என்று தெரிவித்துள்ளார் 

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.

மாத்தளையில் நேற்று நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், ”நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தேசிய அரசாங்கத்தை அமைக்கப் போவதாக ஐதேக கூறி வருகிறது. ஆனால், தேசிய அரசாங்கத்தை அமைக்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இணங்காது.

நாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களைப் பெறும் நம்பிக்கை எமக்குள்ளது. எனவே தேசிய அரசாங்கம் அமைக்கப்படாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையைக் குறித்தும், அவர்களின் ஆதரவை ஐதேக பெறுவது குறித்தும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வடக்கு மாகாணத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுயாட்சி கேட்கிறது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் அதற்கு அனுமதிக்காது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரப்பகிர்வைக் கோருகிறது. ஆனால் நாட்டைப் பிரிப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஒருபோதும் இடமளிக்காது.

தமிழர்களின் நியாயமான கவலைகளுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் தீர்வு காணும். ஆனால் ஈழ அரசை உருவாக்கும் தீர்வுக்கு இணங்காது.” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.