ரோம் உடன்படிக்கை ஊடாக மஹிந்தவை காப்பாற்றியுள்ளேன்! ரணில்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்படுவதை தாம் தடுத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ரோம் உடன்படிக்கையில் தாம் கைச்சாத்திடாத காரணத்தினால் மஹிந்தவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் ரணில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ரோம் உடன்படிக்கையில் தாம் கைச்சாத்திடாத காரணத்தினால், இலங்கையின் படைவீரர்கள் எவரையும் சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால் கொண்டு செல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக உள்ளக விசாரணைகளை நடத்த முடியும்.
எனினும் 2009ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பன் கீ மூனுடன் இணைந்து கையெழுத்திட்டு வெளியிட்ட அறிக்கையில் சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொண்டுள்ளார் என்று ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் குற்றமிழைக்கும் படைவீரர்கள் தொடர்பில் உள்ளக விசாரணைகளை முன்னெடுத்து தண்டனை வழங்க முடியும் என்று ரணில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை கொலை செய்ய முனைந்த விடுதலைப்புலிகளின் அமைப்புடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தியே மஹிந்த ராஜபக்ச 2005ஆம் ஆண்டில் ஜனாதிபதியானார்.
இது அவர், தமது கட்சி தலைவிக்கு செய்த துரோகமாகும். அடுத்தபடியாக தற்போது கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மஹிந்த ராஜபக்ச செயற்பட்டு வருகிறார். எனவே மக்களே கட்சிக்கு எதிராக அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துக்கூற வேண்டும் என்று ரணில் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநர் வெளிநாட்டவர் அல்ல. அவர் இலங்கையர். இந்தநிலையில் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ளமுடியும். இதன்காரணமாகவே அவரை பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்பதில் உடன்படவில்லை என்று ரணில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னைய ஆட்சியில் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ச, ஒரு வெளிநாட்டவர். அவர் பிற்பகுதியிலேயே இலங்கையின் பிரஜாவுரிமையை பெற்றுக்கொண்டார் என்றும் ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை குறித்து கருத்துரைத்துள்ள ரணில் விக்கிரமசிங்க, பாக்குநீரிணையால் பிரிக்கப்பட்ட இரண்டு உறவுக்காரர்களுக்கு இடையிலான பிரச்சினையே இதுவாகும். எனவே இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு எட்டப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தம்மை சந்தித்தபோது தாம் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர் என்றும் தமது உறவுக்காரர்கள் இலங்கையில் இருப்பதாக குறிப்பிட்டதையும் ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.