தமிழ், முஸ்லிம் உறவு பலப்படுவதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறோம்! சம்பந்தன் உறுதி
தமிழ், முஸ்லிம் மக்களின் உறவு பலப்படுத்தப்பட வேண்டும். அதற்காக நாங்கள் முஸ்லிம் மக்களுக்கு உதவ காத்திருக்கிறோம். நடைபெறவுள்ள தேர்தலின் பின் நியாயமானதொரு தீர்வு ஏற்படத்தான் போகின்றது.
ஆகவே, நீங்கள் எம்முடன் இணைந்துதான் ஆக வேண்டும்.எனவே தான் தமிழ், முஸ்லிம் உறவு பலமாக்கப்பட வேண்டுமென்பதில் நாம் கண்ணும் கருத்துமாக இருக்கின்றோம். இது எமது எதிர்பார்ப்பு, என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
மூதூர் முஸ்லிம் பிரமுகர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கும் சம்பந்தனுக்குமிடையிலான சந்திப்பொன்று அவரின் இல்லத்தில் கடந்த வியாழன் மாலை நடைபெற்றது. இதில் கருத்து வெ ளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.நூற்றுக் கணக்கான முஸ்லிம் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். இரா. சம்பந்தன் நிகழ்வில் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
திருகோணமலை மாவட்ட முஸ்லிம் மக்கள் இந்த தேர்தல் காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை விசுவாசிக்கும் நல்லெண்ணத்துடன் நாடிவந்திருப்பதையிட்டு தமிழ் மகன் என்ற வகையில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் வரவினால் தமிழ் முஸ்லிம் மக்களின் உறவுக்கான புதிய பாலம் கட்டியெழுப்பப்பட வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்கும் ஆர்வத்துடனும் தீவிரத்துடனும் நீங்கள் வந்திருப்பது தமிழ் முஸ்லிம் உறவில் இம்மாவட்டத்திலிருந்து ஒரு புதிய அத்தியாயம் தொடக்க பட போகிறது என்பதைக் காட்டுகின்றது.
தந்தை செல்வாவின் பாரம்பரியத்தில் நான் வளர்ந்தவன். அதனால் முஸ்லிம் தமிழ் உறவை நேசிப்பவன். நீங்கள் பல்வேறு வாக்குறுதிகளை கோரிக்கையாக்குகின்றீர்கள். உங்கள் கோரிக்கைக்கு அமைய நான் வாக்குறுதியளித்தால் அதை நான் நிறைவேற்ற வேண்டும். எக்காரணம் கொண்டும் என்னுடைய வாக்குறுதியில் பிழையேற்படக் கூடாது. நான் சில விடயங்கள் பற்றி சிந்தித்திருக்கின்றேன்.
தேசியப் பட்டியலில் மூதூருக்கு ஒரு பிரதிநிதித்துவத்தை வழங்க நான் விரும்பினாலும் கூட அதுகாலம் கடந்துவிட்டது. சிலவேளைகளில் இச்சந்திப்பு முந்தியிருந்தால் நான் அது பற்றி கவனம் செலுத்த வாய்ப்பிருந்திருக்கும். இருந்த போதிலும் இச்சந்திப்பினால் ஒரு வழிவகை கிடைக்குமா? என தேட முயற்சிக்கின்றேன்.
எனது எதிர்பார்ப்பானது இப்பாராளுமன்ற தேர்தலில் நாம் பெறக் கூடிய வாக்கு வீதம் நிச்சயமாக அதிகரிக்கும். 2004 ஆண்டு தேர்தலில் 69 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தோம். அதைவிட இன்று திருமலை மாவட்ட தமிழ் மக்கள் மத்தியில் ஒரு உற்சாகமுண்டு. விஷேடமாக ராஜபக் ஷவின் தோல்விக்கு பிறகு இந்நிலை ஏற்பட்டுள்ளது. இன்று எமது மக்களிடம் ஒரு எதிர்பார்ப்பிருக்கிறது. நாம் நல்லதொரு மாற்றத்தை அடைவோம். என்னைப் பொறுத்தவரை அதுவல்ல முக்கியம். முக்கியமானது தமிழ் முஸ்லிம் உறவாகும். இரு சமூகங்களுக்கிடையில் பாலமொன்று கட்டியெழுப்பப்பட வேண்டும்.
இதுவொரு நல்ல ஆரம்பம். நல்ல சந்தர்ப்பம். அதை நிலை நிறுத்துவதற்கு நாம் முயற்சிக்கின்றோம். இது ஒரு புரட்சிகரமான விடயம். எனவே உங்களது மனமாற்றத்தை நாம் வரவேற்கின்றோம். நான் கடந்தவாரம் திருகோணமலையின் மூன்றாவது ஆசனம் பற்றி பேசியது கவலையீனமாக அல்ல. எனது கணிப்பு முஸ்லிம் மக்கள் எம்மை ஆதரிப்பதன் மூலமாக 15 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் எமக்கு அளிப்பாராக இருந்தால் மூன்றாம் இடத்தை நாம் கைப்பற்றுவது முடியாத ஒருவிடயமல்ல. எனவே முஸ்லிம் மக்களின் கணிசமான வாக்கு எமக்கு கிடைக்குமாயின் இரு ஆசனத்துடன் போனஸ் ஆசனமும் எமக்கே கிடைக்கும் வாய்ப்புண்டு.
நடைபெறவுள்ள தேர்தலின் பின் நியாயமானதொரு தீர்வு ஏற்படத்தான் போகின்றது. ஆகவே நீங்கள் எம்முடன் இணைந்துதான் ஆகவேண்டும். எனவே தான் தமிழ் முஸ்லிம் உறவு பலமாக்கப்பட வேண்டுமென்பதில் நாம் கண்ணும் கருத்துமாக இருக்கின்றோம். இது எமது எதிர்பார்ப்பு, இலக்கு. இன்று இந்த உறவை கட்டியெழுப்பும் நல்ல நோக்கத்துடன் இன்று வந்திருக்கிறீர்கள். என்னால் இயன்ற காரியங்களை இதற்காக நான் செய்வேன். அதில் நீங்கள் சிறிதளவும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. இந்த சந்திப்பின் பின் இரா.சம்பந்தன் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், த.தே.கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கும் மூதூர் முஸ்லிம் பிரமுகர்களுக்குமிடையில் ஓர் சந்திப்பு இடம்பெற்றது. சகல விடயங்களையும் நாம் மனம் திறந்து பேசியுள்ளோம். நல்ல முடிவுகள் எடுக்கப்படுமென்று நம்பிக்கை எமக்குண்டு என்றார்.
இளைஞன் கருத்து
இதேவேளை இந்த சந்திப்பில் இடை நடுவில் கருத்து தெரிவித்த ஒரு முஸ்லிம் இளைஞன் குறிப்பிடுகையில்
தந்தை செல்வநாயகம் என்றெல்லாம் எமது மூத்தவர்கள் கூறுவார்கள். நாங்கள் அவர் வாழ்ந்த காலத்தில் பிறக்கவில்லை. எங்கள் காலத்தில் ஒரு தந்தை வாழுகின்றார் என்றால் அது ஐயா சம்பந்தனாகிய நீங்கள்தான். 30 வருடகாலம் நாங்கள் இடைவெளி கொண்டவர்களாகவே இருந்துவிட்டோம். தந்தையாகிய தங்கள் தலைமையில் முஸ்லிம் தமிழ் உறவு மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றார்.
திடீர் தௌபீக்
இது இவ்வாறு இருக்க கலந்துரையாடலில் திடீர் தெளபீக் கருத்து வெளியிடுகையில்,
ஐயா நீங்கள் உலகத்திலேயே சிறந்த சட்ட வல்லுனர். வழியைத் தேடுவது என்பது உங்களுக்கு இலகுவான காரியம் என்று குறிப்பிட்டார்.
இதற்கு பதில் அளித்த இரா.சம்பந்தன் குறிப்பிடுகையில்
தேர்தலின்பின் அரசியலில் முழுமையான மாற்றம் ஏற்படும். மிகவும் கவனமான அதிகாரப்பகிர்வு கொண்டுவரப்படும். அதன்பின் நாங்கள் எமது மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிப்போம். நான் உங்களிடம் ஒரு வினாவைக் கேட்கிறேன். நீங்கள் பேரம் பேசுகிறேன் என நினைத்துக் கொள்ளக்கூடாது. தங்கள் கோரிக்கை விடயத்தில் நாம் ஒரு ஒழுங்குக்கு வருவோமாக இருந்தால் அந்த ஒழுங்கின் மூலமாக (ஒப்பந்தம்) முஸ்லிம் மக்களுடைய எத்தனை வீத வாக்குக்களை த.தே.கூட்டமைப்பு பெறமுடியும் என்று கலந்துரையாடலில் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த திடீர் தௌபீக் நீங்கள் இம்மாவட்டத்தில் எத்தனையாயிரம் வாக்குகளைப் பெறுவீர்கள் என்று சம்பந்தனிடம் வினவினார்.
தௌபீக்கின் கேள்விக்கு சம்பந்தன் பதிலளிக்கையில்;
நாங்கள் இம்மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களுடைய வாக்குக்களை முழுமையாகப் பெறுவோம். சுமார் 65 ஆயிரம் வாக்குகளை நாம் பெற முடியும். 2004 ஆம் ஆண்டு தேர்தலில் 68 ஆயிரம் வாக்குக்களைப் பெற்றோம் என்று குறிப்பிட்டார்.
எனினும் இதன் போது குறிப்பிட்ட தௌபீக் 2012 மாகாண சபை தேர்தலில் நீங்கள் 44 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தீர்களே என்று வினவினார்.
அதற்கு பதிலளித்த சம்பந்தன்
அது ஒரு முழுமையான வாக்களிப்பு வீதமல்ல என்று குறிப்பிட்டார். இதன்போது முஸ்லிம் பிரதிநிதியொருவர் குறிப்பிடுகையில்
2012 ஆண்டு தேர்தலில் 44 ஆயிரம் வாக்குகள் த.தே.கூட்டமைப்புக்கு கிடைத்தன. 43 ஆயிரம் வாக்குகள் முஸ்லிம் காங்கிரஸூக்கு கிடைத்தன. 24 ஆயிரம் வாக்குகள் ஐ.தே.கட்சிக்கு கிடைத்தன. அந்த வகையில் தங்களிடம் 44 ஆயிரம் வாக்குகள் ஏலவேயுண்டு. ஆயிரம் வாக்குகள் சராசரியாக கூடியிருக்கலாம். 50 ஆயிரம் வாக்கு வங்கி உங்களிடமுண்டு. தற்பொழுது ஐ.தே.கட்சியின் அலை அதிகரித்திருப்பதால் இந்நிலைமை ஆராய்ந்து பார்த்துக் கொள்கிறோம் என்றார்.
இந்நிலையில் திடீர் தௌபீக் எம்.பி. குறிப்பிடுகையில்;
சம்பந்தன் ஐயா மூதூரில் வந்து முஸ்லிம் மக்களுக்கு ஒரு வார்த்தை கூறினால் போதும். சுமார் 15 ஆயிரம் வாக்குள்ள மூதூரில் நாங்கள் 10 ஆயிரம் வாக்குகளே த.தே.கூட்டமைப்புக்குப் பெற்றுத்தருவோம். நீங்கள் கூறப் போகின்ற வார்த்தைகள் தான் திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழ் முஸ்லிம் உறவை உச்ச நிலை அடையச் செய்யும்.
கடந்த இரண்டு நாட்களாக பிரதமர் ரணில் மற்றும் பல ஐ.தே.க முக்கியஸ்தர்கள் தொலைபேசியில் எம்மை அழைக்கிறார்கள். எம்முடன் வாருங்கள் எம்.பி.பதவி தருகிறோமென்று கூறுகின்றார்கள். எமது நோக்கம் அமைச்சர் பதவி பெறுவதல்ல. முஸ்லிம் தமிழ் உறவை கட்டியெழுப்ப வேண்டுமென்ற ஆதங்கத்துடனையே தங்களை நாடி வந்துள்ளோம். மூதூர் பிரதேசம் முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்குக்கு உட்பட்ட பிரதேசம். ஆனால் இம்முறை தேர்தலில் நாங்கள் விரும்பிய ஒரு வேட்பாளரை அவர்கள் நிறுத்த விரும்பவில்லை. எமது ஏகோபித்த முடிவை தலைவர் உதாசீனம் செய்து விட்டார். கிண்ணியா வேட்பாளர் ஒருவரை வெல்லவைக்க வேண்டுமென்பதற்காகவே மூதூர் மக்களின் விரும்பத்தை அவர் நிறைவேற்றவில்லை.
ஆகவே எமது முழு இலக்கு மூதூர் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடிப்பதாகும். மூதூருக்கு பிரதிநிதித்துவம் தரமாட்டேன் என்று சொன்னதற்குரிய காரணம் மூதூர்மக்கள் வெற்றி பெற்று விடுவார்கள் என்ற பயத்தின் காரணமாகும். முஸ்லிம் காங்கிரஸூக்காக உயிர் தியாகம் செய்தவர்கள் மூதூர் மக்கள். அத்தகைய மக்களின் கோரிக்கை இத்தேர்தலில் நிராகரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு சிறிய வாக்குறுதி தாருங்கள். முழு மூதூரையும் கூட்டமைப்பின் பக்கம் நாம் திருப்பிக் காட்டுவோம்.
நீங்கள் மூதூரில் உள்ள ஒருவருக்கு தேசியப்பட்டியலில் இடந்தருவேன் என்று வாக்குறுதி தாருங்கள், மாபெரிய மேடை போட்டு அதில் வாக்காளர்களைத் திருப்பிக் காட்டுவோம். இதை நாம் கூறுவது வாக்கு தருவதற்காக மட்டும் என்று கருதவேண்டாம். தமிழ் முஸ்லிம் உறவை திருகோணமலை மாவட்டத்திலிருந்து ஆரம்பிப்பதற்கு இதையொரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்துவோம். மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை நீங்கள் இம்மாவட்டத்திலிருந்து பெறமுடியும்.
கிண்ணியா பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரஸூக்கு மிக மோசமான வீழ்ச்சியொன்று ஏற்பட்டிருக்கின்றது. அம்மக்கள் தற்பொழுது சிந்திக்கிறார்கள். தங்களுக்கென நல்லதொரு தலைமைத்துவம் இல்லையென்று இல்லை என்று கருதுகின்றனர். எனவே நல்லதொரு முடிவை நாங்கள் உடன் எடுக்க வேண்டும் என்றார்.
கலந்துரையாடலில் த.தே.கூட்டமைப்பின் சார்பில் தலைவர் இரா.சம்பந்தனுடன் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான க.துரைரெட்ணசிங்கம் மற்றும் வேட்பாளர்களான க.கனகசிங்கம், க.ஜீவருபன் மற்றும் முன்னாள் நகரசபைத் தலைவர் க.செல்வராஜா, உபதலைவர் ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் வாமதேவன், திருச்செல்வம், கிளைத் தலைவர் கே.சத்தியசீவராஜா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
Close