மஹிந்த மகாராஜாவும் குடும்பத்தினரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள்! என்கிறார் ராஜித
மஹிந்த ராஜபக்ஷ என்ற மகாராஜாவும் அவரது குடும்பத்தினரும் மேற்கொண்ட ஊழல் மோசடிகள், கொலைகள் தொடர்பாக நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள். அவர்களுக்கு நிச்சயம் தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் எனத் தெரிவித்த அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன.
ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் இணைந்து நாட்டை கட்டியெழுப்புவார்கள் அதற்கு மக்கள் எமக்கு வெற்றியை பெற்றுக் கொடுப்பது நிச்சயமாகும் என்றும் கூறினார்.
கொழும்பில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஐ.தே.முன்னணியின் கொள்கை பிரகடன வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றுகையில், மகாராஜாவினால் அவரது பிள்ளைகள் சகோதரர்கள் மற்றும் சுற்றியிருக்கும் மோசடிக் கும்பலின் ஊழல் மோசடிகள் கொலைகள் தொடர்பாக விசாரணைகளை நடத்த ஆரம்பித்தவுடன் அக் கூட்டத்தினர் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து குழப்பமடைந்துள்ளனர்.
இதனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சுற்றி வளைத்து கையிலெடுத்து எமது நல்லாட்சிக்கான பயணத்திற்கு தடைபோட ஆரம்பித்துள்ளனர். இக் கூட்டத்தோடு எதனோல் போதைப்பொருள் விற்பனையாளர்கள் குதிரை பந்தயக்காரர்கள் கசினோ சூதாட்டக்காரர்களும் இணைந்து கொண்டு எமது பயணத்திற்கு தடைபோட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இனவாதிகள் மதவாதிகளும் தலைதூக்கியுள்ளனர். மகாராஜா இன்று அப்பாவி பொது மக்களை தாக்கும் அளவிற்கு குழம்பிப் போயுள்ளார். அன்று சரத் பொன்சேகாவை சிறையில் அடைத்தது போன்று சட்டத்தையும் ஒழுங்கையும் மீறி நாங்கள் செயற்பட மாட்டோம்.ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் சட்டத்தை மதிப்பவர்கள். எனவே அனைத்தும் சட்டரீதியாக விசாரணை செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும்.
தாஜுடீன் கொலை, பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமை போன்ற விடயங்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. விரைவில் இதன் பின்னணியில் உள்ளோர் கைது செய்யப்படுவார்கள். மகாராஜாவையும் அவரது குடும்பத்தையும் நீதியின் முன்பு மண்டியிடச் செய்வோம். தேர்தலுக்கு பின்னர் நல்லாட்சியை அர்த்தமுள்ளதாக்குவோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சர் சம்பிக்க ரணவக்க
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு போதும் மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக்க மாட்டாரென கூறிவிட்டார். எனவே மஹிந்தவின் கனவு பலிக்கப் போவதில்லை என இங்கு உரையாற்றிய அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
அமைச்சர் சம்பிக்க இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஜனாதிபதி மைத்திரியும் மஹிந்தவும் ஒருபோதும் இணையமாட்டார்கள். 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவு மற்றும் ஜனாதிபதியின் ஆதரவுடனேயே பிரதமர் நியமிக்கப்பட வேண்டும்.
ஆனால் மஹிந்தவை பிரதமராக்க ஜனாதிபதி விரும்பவில்லை. எனவே இது நிறைவேறப் போவதில்லை. மஹிந்தவின் தேசப்பற்று மக்களை ஏமாற்றும் வேஷமாகும். புலிகளுக்கு 8000 இலட்சம் வழங்கினார். பிரபாகரன் இத் தொகையை பெற்றுக் கொண்டதற்கு சாட்சியங்கள் உள்ளன.
கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள புலி உறுப்பினர் பூவண்ணனுடன் மேலும் இருவர் சிறையில் சாட்சிகளாக உள்ளனர். மஹிந்தவுக்கு எதிராக 7000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதில் 52 மட்டுமே விசாரணை செய்யப்பட்டுள்ளன. ஏனையவை விசாரிக்கப்படும் போது பல உண்மைகள் வெளிவரும்.
எதிர்வரும் தேர்தலில் முடிந்தால் மஹிந்த 100க்கு 50 வீதம் வாக்குகளை எடுத்துக்காட்ட வேண்டுமென நான் சவால் விடுக்கின்றேன்.எம்மிடையே பல கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் நாட்டுக்காகவும் நல்லாட்சிக்காகவும் ஒன்றிணைந்துள்ளோம். எனவே ஐ.தே.முன்னணியின் வெற்றி நிச்சயம் என்றும் அமைச்சர் சம்பிக்க தெரிவித் தார்.