பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டார் என்ற செய்தி எந்தவித உண்மைத்தன்மையும் இல்லை
அவர் உயிருடன் கைதுசெய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டே கொலைசெய்யப்பட்டுள்ளார் எனவும் வெளியாகியுள்ள செய்தியில் எந்தவித உண்மைத்தன்மையும் இல்லை இவ்வாறு தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெளக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இறுதிப்போரில் பிரபாகரன் உயிருடன் கைதுசெய்யப்பட்ட பின்னர் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரைச் சந்தித்தார் எனவும், அதனைத் தொடர்ந்து பிரபாகரன் சித்திரவதை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார் எனவும் மஹிந்தவுடன் மிகவும் நெருக்கமான முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மானைச் (விநாயகமூர்த்தி முரளிதரன்) சுட்டிக்காட்டி ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
தேர்தல் காலத்தில் இவ்வாறான ஒரு செய்தி வெளியாகியுள்ளமையால் இதன் நோக்கம் என்ன என்பது தொடர்பில் எமக்குத் தெரியாது. எனினும், இறுதிக்கட்டப் போர் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் மஹிந்த ராஜபக்ஷ இலங்கையில் இருக்கவில்லை என்பதை அனைவரும் அறிவர். அவர் ஜோர்தான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.
இந்த நிலையில், பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டார் எனவும், மஹிந்த ராஜபக்ஷ அவரைச் சந்தித்தார் எனவும், பின்னர் பிரபாகரன் சித்திரவதை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார் எனவும் தெரிவிக்கப்படும் கருத்துகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சரே இது தொடர்பில் பதில் கூறவேண்டும் - என்றார்.