Breaking News

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்?

கடலில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் வழிமறித்து கற்கள், காலி பாட்டில்கள், விறகு கட்டைகளால் தாக்கியதோடு மட்டுமின்றி, துப்பாக்கிகளால் சுட்டு விரட்டியடித்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இராமேஸ்வரம் கடலோரப் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் நேற்று 251 படகுகளில் ஏறி கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது, கச்சத்தீவு அருகே காவல் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளை நோக்கி கற்கள், காலி பாட்டில்கள், விறகு கட்டைகளால் தாக்கியதோடு மட்டுமின்றி, துப்பாக்கிகளால் சுட்டும் மிரட்டி, அங்கிருந்து விரட்டி அடித்தனர் என இந்திய ஊடகமான மாலை மலர் குறிப்பிட்டுள்ளது. 

இலங்கை கடற்படையினரின் தாக்குதல் இலக்கில் இருந்து வெகு தூரத்தில் தமிழக மீனவர்கள் இருந்ததால் அவர்களின் படகுகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. அவர்களின் எதிர்ப்பையடுத்து சுமார் நூறு படகுகள் கரை திரும்பின. இதர படகுகளில் சென்றவர்கள் தனுஷ்கோடி கடற்பகுதியில் வலை விரித்து மீன் பிடித்தனர் எனக் கூறப்படுகின்றது.