மைத்திரியுடன் இணைந்து தொடர்ந்தும் சாதிப்போம்! என்கிறார் ரணில்
மைத்திரி- ரணில் உறவினைக் கொண்டு நாட்டில் நல்லாட்சியை உறுதிப்படுத்தியதனை போன்று, அடுத்த ஐந்தாண்டு காலப்பகுதியில் மத்தியவர் க்கத்தினர் முன்னேற்றமடைவதற்கு நடவடிக்கை எடுப்போம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாட்டில் நல்லாட்சியையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்ட முடியாது என்ற தர்க்கத்தை மாற்றியமைத்து எவராலும் சாதிக்க முடியாததை நாம் சாதித்துக் காட்டினோம் என்றும் அவர் குறிப்பிட்டார். கோல்டன் கீ வங்கி வைப்பாளர்களுக்கு வழங்கப்படவிருந்த பணத்தொகையை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதமர் மேலும் அங்கு உரையாற்றுகையில்
2008 ஆம் ஆண்டளவில் கோல்டன் கீ நிறுவனம் வர்த்தக ரீதியாக முழுமையாக வீழ்த்தப்பட்டது. இதன் காரணமாக குறித்த வங்கியில் தமது சொத்துக்களை வைப்பிலிட்ட பல்லாயிரக் கணக்கான மக்கள் பெருமளவில் வேதனைப்பட்டனர். இதன் காரணமாக ஒரு சிலர் தமது உயிரையும் மாய்த்துக்கொண்டனர்.
2008 ஆம் ஆண்டு கோல்டன் கீ வங்கி வீழ்த்தப்பட்டதிலிருந்து குறித்த வங்கியில் வைப்பிலிட்டோர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். இருந்த போதிலும் முன்னைய அரசாங்கம் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு எந்தவொரு தீர்வினையும் முன்வைக்கவில்லை. நாம் பாராளுமன்றத்தில் பலமுறை இது தொடர்பில் கேள்விகனைகள் தொடுத்த போதிலும், இது குறித்து எந்தவொரு அவதானத்தையும் முன்னைய ஆட்சியாளர்கள் செலுத்தவில்லை.
அத்துடன் கோல்டன் கீ வங்கியில் வைப்பிலிட்ட பணங்களை மீளப்பெற்று தருவதாக கூறி வைப்பாளர்களை தேர்தல் பிரசார பணிகளிலும் ஆர்ப்பாட்டங்களிலும் கலந்துக் கொள்ள வைத்தனர். இதனால் கோல்டன் கீ வங்கி வைப்பாளர்கள் கடந்த ஆட்சியின் போது ஏமாற்றப்பட்டார்கள். குறித்த வங்கி சார்ந்த முக்கிய பொறுப்புகள் இலங்கை மத்திய வங்கியிடமே பொறுப்பளிக்கப்பட்டிருந்தன.
இருந்த போதிலும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இந்த பிரச்சினையை புறக்கணித்து செயற்பட்டார். வைப்பு பணங்கள் மாத்திரமின்றி குறித்த வங்கியின் உயர் பதவிகளுக்கு தமது உறவினர்களை நியமித்தார். ஆகவே வங்கிகள் தொடர்பான காரியங்கள் மத்திய வங்கியிடமே பொறுப்பளிக்கப்பட்டிருந்தபோதும் குறித்த பொறுப்பினை கண்டுக்கொள்ளவில்லை.
எனவே கோல்டன் கீ வங்கியில் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. குறித்த மோசடிகளின் காரணமாக கோல்டன் கீ வங்கிக்கு 5800 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே கோல்டன் கீ வங்கியின் நிதி சார்ந்த மோசடிகளுக்கு மத்திய வங்கியே பொறுப்பு கூற வேண்டும்.
எனினும் அதனை நிலைநாட்டுவதற்கு முன்னைய ஆட்சியாளர்களினால் முடியாமல் போனாலும், ஜனவரி 8 ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக நாம் அதனை சாதித்து காட்டியுள்ளோம். அரச ஊழியர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டது. அதுபோன்று பல்வேறு சாதனைகளை நாம் நிலைநாட்டியுள்ளோம்.
இந்நிலையில் கோல்டன் கீ நிறுவனத்தின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட அவதானம் எடுத்ததுடன், அமைச்சரவையின் போது இது தொடர்பில் காத்திரமான தீர்மானம் எடுக்கப்பட்டது. வைப்பாளர்களுக்கு சொந்தமான பணத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு உயர் நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியிருந்தது.
இதன்பிரகாரம் குறித்த பிரச்சினை நிதி அமைச்சுக்கு பொறுப்பளிக்கப்பட்டது.இதன்படி நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர் மீது பொறுப்பளிக்கப்பட்ட கடமைகளை சரிவர நிறைவேற்றி காட்டியுள்ளார். ஆகவே இது முதற்கட்ட நடவடிக்கையாகும். அதனை வெற்றகரமாக நிறைவேற்றியுள்ளோம். அடுத்த கட்ட நடவடிக்கையின் போது கோல்டன் கீ வங்கி வைப்பாளர்களுக்கு சொந்தமான சொத்துக்களையும் மீட்டுத் தருவோம்.
எனவே முன்னைய ஆட்சியின் போது மத்திய வங்கி அரசியல் மயப்படுத்தப்பட்டது. எனினும் தற்போது நல்லாட்சி நிலைநாட்டப்பட்டதன் பின்னர் அரசியல் தலையீடுகள் முற்றாக ஒழிக்கப்பட்டன.
இந்நிலையில் நாட்டில் நல்லாட்சியை உறுதிப்படுத்தியதனை போன்று நாட்டில் பலமான மத்திய தர வர்க்கத்தை உருவாக்க வேண்டியுள்ளது. மைத்திரி- – ரணில் உறவினைக் கொண்டு நாட்டில் நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டதனை போன்று அடுத்த ஐந்தாண்டு காலப்பகுதியில் பலமான மத்திய வர்க்கம் மேலோங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம் . இதன்பிரகாரம் நாட்டில் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.