யாழ்ப்பாணத்தில் தேர்தலை இடைநிறுத்தக் கோரிய வழக்குத் தள்ளுபடி
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை இடைநிறுத்தக் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.
யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக, எங்கள் சிறிலங்கா சுதந்திர முன்னணி என்ற அரசியல் கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவை யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி நிராகரித்திருந்தார்.
இதற்கு எதிராகவும், தமது வேட்புமனுவை ஏற்றுக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிடும் வரையிலும், யாழ். மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலை இடைநிறுத்தி வைக்க உத்தரவிடுமாறும் கோரி எங்கள் சிறிலங்கா சுதந்திர முன்னணி சார்பில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை நேற்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த மனுவின் பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை அனுப்ப மறுத்த மேல்முறையீட்டு நீதிமன்றம், வேட்புமனுவை சட்டரீதியானவே மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி நிராகரித்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் கட்டளைச்சட்டத்தின் 15(3)ஆம் பிரிவின் கீழ், மனுதாரின் கட்சி சட்டத்தின் பிரகாரம் வேட்புமனுவை பூரணப்படுத்தவில்லை என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.