கொடிகாமம் கொலை வழக்கு! 2 எதிரிகளுக்கு மரண தண்டனை விதித்தார் நீதிபதி இளஞ்செழியன்
கொடிகாமம் பகுதியில் செல்லையா பொன்னுராசா என்பவரைக் கொலைசெய்தனர் என சட்டமா அதிபரால் குற்றஞ்சுமத்தப்பட்டு யாழ். மேல் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது எதிரிகள் இருவருக்கு மரண்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கொடிகாமம் கச்சாய் பகுதியில் செல்லையா பொன்னுராசா என்பவரை கொலை செய்தனர் என சிவபாலு கிருஸ்ணகுமார், சுந்தரலிங்கம் செந்தில்குமார் ஆகிய இரண்டு எதிரிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் குற்றஞ்சுமத்தப்பட்டு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையின்போது, அரச சட்டத்தரணி, திருமதி நளினி சுபாகரன் அரச தரப்பு சாட்சிகளை நெறிப்படுத்தினார். அரச தரப்பு சாட்சிகள் அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் இறந்தவருடைய மனைவி நாகபூபதியும் இறந்தவருடைய மகன் கேதீஸ்வரனும் குறிக்கப்பட்ட கொலை 5 நிமிடத்தில் நடந்து முடிந்ததென நீதிமன்றத்தில் தாங்கள் அளித்த சாட்சியத்தின்போது தெரிவித்திருந்தனர்.
கொட்டிலில் படுத்திருந்த அப்பாவைத் தாக்கிவிட்டு எதிரிகள் கேற்றடிக்கு வரும்போது முதலாவது எதிரியான கிருஸ்ணகுமாரின் கையில் கத்தியும் இரண்டாவது எதிரியாகிய செந்தில்குமாரின் கையில் பொல்லும் இருந்ததைத் தான் கண்டார் எனவும் தன்னைக் கண்டதும் இரண்டு எதிரிகளும் விழுந்தடித்து ஓடினர் எனவும் இறந்தவரின் மகன் கேதீஸ்வரன் சாட்சியமளிக்கும்போது தெரிவித்திருந்தார்.
இறந்தவரின் மனைவி நாகபூபதி நீதிமன்றில் சாட்சியமளிக்கையில் - சத்தம் கேட்டு தான் ஓடிச் சென்றபோது, கொட்டிலில் இருந்து கேற்றை நோக்கி இந்த இரண்டு எதிரிகளும் ஓடியதை தான் கண்டார் எனக் கூறியிருந்தார். அவர்களில் ஒருவருடைய கையில் கம்பி போன்ற ஒரு பொருள் இருந்ததைக் கண்டதாகவும் அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கில் அளிக்கப்பட்ட, மருத்துவ சாட்சியத்தில் மொட்டையான ஓர் ஆயுதத்தினால் இறந்தவருடைய வயிற்றுப் பகுதியில் பலமாக அடிக்கப்பட்டதனால் குடலில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளது என்றும், இறந்தவருடைய காலில் ஒரு கிழிவு காயம் காணப்பட்டாதகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. வழக்கு விசாரணையின்போது எதிரிகள் தரப்பில் சாட்சியமளிக்கப்படவில்லை.
எதிரிகள் இருவரும் குற்றவாளி கூண்டில் நின்று வாக்குமூலம் ஒன்றை அளித்தனர். நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட சாட்சியங்கள், எதிரிகளின் வாக்குமூலங்கள் என்பவற்றை கூர்ந்து அவதானித்த நீதிபதி இளஞ்செழியன், இந்திய உச்ச நீதிமன்ற வழக்கொன்றைச் சுட்டிக்காட்டியதுடன், இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க, கொகந்தர கொலை வழக்கில் அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டி, எதிரிகள் இருவரும் கொலை செய்ய வேண்டும் என்ற பொது எண்ணத்துடன் கொல்லப்பட்டவரைத் தாக்கிக் கொன்றுள்ளார்கள் என்பது நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது என என தெரிவித்து தனது தீர்ப்பை வழங்கியுள்ளார்.
இதேவேளை - இந்த வழக்கு விசாரணையின்போது, வழக்குத் தொடுனர் தனது தரப்பு சாட்சியங்களை முன்வைத்து எதிரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபித்தபோது, எதிரிகள் குற்றவாளிகளுக்கான கூண்டில் இருந்து கூண்டு கூற்றை மட்டுமே அளித்துள்ளனர் என தெரிவித்துள்ள நீதிபதி இளஞ்செழியன், இலங்கையின் உச்ச நீதிமன்றம், கிருஷாந்தி குமாரசாமி கொலை வழக்கு, ரீட்டா ஜோன் கொலை வழக்கு ஆகிய வழக்குகளின் தீர்ப்புக்களை ஒப்பு நோக்கி, எதிரிகள் மீது சாட்டப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அரச தரப்பைச் சேர்ந்தது என்பதை மன்று ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்தார்.
இருந்த போதிலும், அரச தரப்பின் சாட்சியங்களை எதிரிகள் மறுத்துரைக்கவோ அல்லது அதற்கு எதிரான சாட்சியங்களை அளிக்கவோ விளக்கமோ அளிக்காததை, மேற்குறிப்பிட்ட வழக்குகளின் தீர்ப்புக்களுடன் ஆய்வு செய்து, இரண்டு எதிரிகளும் குற்றவாளிகளாகக் காணப்பட்டிருப்பதாகத் தெரிவித்து, அவர்களுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
இந்த வழக்கில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பின் பிரகாரம், நாட்டின் ஜனாதிபதியால் தெரிவு செய்யப்படும் இடத்தில், தெரிவு செய்யப்படும் நேரத்தில் இவர்கள் இருவருக்கும் கழுத்தில் தூக்கு மாட்டி, தூக்குத் தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்றும் நீதிபதி தமது தீர்ப்பில் ஆணையிட்டுள்ளார்.