240 கோடியில் தயாரானதாக கூறப்படும் பகுபலி திரைக்கு வந்தது
இந்தியாவில் இதுவரை தயாரிக்கப்பட்ட திரைப் படங்களிலேயே அதிகபட்ச பொருட்செலவுடன் உருவாக்கப் பட்டதாகக்கூறப்படும் 'பாகுபலி' திரைப்படம் வெள்ளியன்று உலகெங்கிலும் திரைக்கு வந்துள்ளது.
காவியகாலத்து போர்க்கதையை களமாகக்கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்திற்கு 39 மில்லியன் அமெரிக்க டாலர் செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் திரையிடப்படுகிறது.
ஒரு ராஜ்யத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்ட இளவரசர், தனது ராஜ்யத்தை எவ்வாறு போராடி மீட்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை. இந்தப் படத்தின் போர்க் காட்சிகளை, புதிய தொழில்நுட்ப உதவியோடு உருவாக்குவதற்காக பெரும் செலவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் எனப்படும் சிறப்பு தொழில்நுட்பத்திற்கான தலைமை மேற்பார்வையாளராக இருந்த ஸ்ரீநிவாஸ் மோகன், படத்தில் பெரும்பாலான காட்சிகள் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டதற்கான காரணத்தை கூறுகையில், இந்தியாவில் தயாராகும் ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் திரைப்படங்களுக்கு ஹாலிவுட் திரைப்படங்களோடு ஒப்பிடும் போது, 80 சகவிதம் குறைவாக செலவிடப்படுவதாக கூறினார்.
இதற்கு முன்பாக இதேபோன்று பிரம்மாண்டமான ஸ்பெஷல் எஃபக்ட் காட்சிகளுடன் உருவாக்கப்பட்ட எந்திரன் திரைப்படம் 35 மில்லியன் அமெரிக்க டாலர்களில் உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டது.
உலகளவில் ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் பயன்பாட்டுடன் உருவாக்கப்படும் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே சமயத்தில், இந்திய திரைப்படங்களிலும் அது போன்ற போக்கு தோன்றுவது ஒன்றும் தவறு இல்லை என்றார் பாகுபலி படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி.
இந்த பாகுபலி திரைப்படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.