தனது விரல்களைப் பாதுகாக்க சும்மா தள்ளிவிட்டேன் என்கிறார் மகிந்த
தனது கைவிரலைக் கெட்டியாக பிடித்துக் கொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளரிடம் இருந்து தப்பித்துக் கொள்ளவே அவரைச் சும்மா தள்ளி விட்டேன் என்று தெரிவித்திருக்கிறார் , முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.
மாத்தறை மாவட்டத்தில் உள்ள அக்குரஸ்ஸவில் செவ்வாய் மாலை நடந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பரப்புரைக் கூட்டத்துக்குச் சென்ற மகிந்த ராஜபக்ச திடீரென ஆவேசமடைந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர் ஒருவரைத் தாக்க முயன்றார்.
மகிந்த ராஜபக்சவின் கையைப் பிடித்த ஆதரவாளரை அவர் தாக்க முதுயன்ற போது, அவரது பாதுகாவலர்கள் தள்ளிவிட்டனர். அப்போது மகிந்த தடுமாறி விழப் போனார். எனினும் ஏனையோர் அவரைத் தாங்கிக் கொண்டனர்.
இந்த காணொளிக் காட்சி இணையத்தில் வெளியாகி உலகெங்கும் ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக நேற்று நடந்த பரப்புரைக் கூட்டம் ஒன்றில், தனது கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட சுதந்திரக் கட்சி ஆதரவாளரைச் சும்மா தள்ளி விட்டேன் என்று மகிந்த ராஜபக்ச கூறியிருக்கிறார்.
“ஒரு வலுவான சுதந்திரக் கட்சி ஆதரவாளர் எனது விரல்களைப் பிடித்துக் கொண்டார். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாகத் தெரிகிறது. அவரது பிடி கடுமையானதாக இருந்ததால், எனது விரல்கள் முறிந்து விடும் போல இருந்தது. நான் சும்மா அவரைத் தள்ளி விட்டேன். எனது விரல்களைப் பாதுகாத்துக் கொள்ள வேறு என்ன செய்ய முடியும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.