Breaking News

இளையவள் வரும் போது அழகு மூத்தவள் போகும் போது அழகு

எங்கள் கிராமத்துப் பண்பாட்டில் மூத்தவள், இளையவள்
என்று பேசும் வழக்கம் உண்டு. செல்வத்திற்கு அதிபதியானவள் இளையவள். தரித்திரத்தின் அதிபதி மூத்தவள்.

இருவரும் ஒரே இடத்தில் இருக்க முடியாதவர்கள். ஒருநாள் மூத்தவளுக்கும் இளையவளுக்கும் இடையே சர்ச்சை. இருவரில் யார் அழகி என்பதே சர்ச்சைக்கான காரணம். தமக்குள் ஏற்பட்ட பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக இருவரும் கிருஷ்ண பரமாத்மாவிடம் செல்கின்றனர்.

சுவாமி! எங்கள் இருவருக்குள்ளும் கடும் சர்ச்சை. இருவரில் யார் அழகானவர் என்று நீங்கள் கூற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். கிருஷ்ண பரமாத்மாவுக்கு தர்மசங்கடமாகிப் போயிற்று. ஒருவரைப் பார்த்து இவர்தான் அழகி என்றால் மற்றவர் தன்மீது கோபம் கொள்வார். எனவே இருவரும் தன்மீது கோபம் கொள்ளாத வகையில் தீர்ப்புக் கூறவேண்டும்.

அந்தத் தீர்ப்பு சரியானதாகவும் இருக்கவேண்டும் என கிருஷ்ண பரமாத்மா நினைத்தார். அதற்காக ஓர் உபாயத்தைக் கையாண்டார். இருவரும் சிறிது தூரம் நடந்து சென்று திரும்பி வாருங்கள் என்றார் கிருஷ்ணன். கிருஷ்ணனால் அறிமுகப்படுத்தப்பட்ட நடந்து செல்லும் முறை இன்றைய அழகு ராணிப் போட்டித் தெரிவுகளிலும் அமுல்படுத்தப்படுவது இங்கு கவனிக்கத்தக்கது. 

கிருஷ்ணனின் உத்தரவுப்படி மூத்தவளும் இளையவளும் சிறிது தூரம் நடந்து சென்று மீளவும் கிருஷ்ணனிடம் வந்தனர். இப்போது கிருஷ்ணனின் தீர்ப்பு. மூத்தவளைப் பார்க்கின்றார். நீ போகின்ற போது நல்ல அழகாக இருக்கின்றாய். இளையவளைப் பார்த்து, நீயோ வருகின்ற போது மிக்க அழகாய் உள்ளாய் என்றார் கிருஷ்ணன். தீர்ப்பு இருவரையும் திருப்திப்படுத்தியது.

மூத்தவள், இளையவள் தொடர்பில் கிருஷ்ணன் வழங்கி தீர்ப்பு நடைபெறப்போகும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கும் பிரயோகிக்கக் கூடியது. அன்புக்குரிய தமிழ் மக்களே!

சிலர் போகின்ற போது அழகாக இருப்பார்கள். சிலர் வருகின்ற போது அழகாக இருப்பார்கள். போகும் போது அழகாக இருப்பவர்கள் வருவதாகவும்; வரும் போது அழகாக இருப்பவர்கள் போவதாகவும் நாங்கள் தீர்ப்பளித்தால் எல்லாம் அம்போ தான்.

ஆகையால் உங்களுக்குத் தெரியும் யார் போக வேண்டியவர்; யார் வரவேண்டியவர் என்று. நிதானமாக ஆராயுங்கள். உங்களிடம் வருகின்ற வரிடம் கேள்வி கேளுங்கள். எங்களுக்காக நீங்கள் செய்தது என்ன? தமிழ் இளைஞர்களின் விடுதலைக்கு உங்கள் பங்களிப்பு என்ன? இனப்பிரச்சினைக்கான உங்களின் தீர்வுப் புத்தகம் எங்கே இருக்கிறது? காணாமல் போனவர்களின் பட்டியல் அடங்கிய விபரக்கொத்தை ஒரு தடவை காட்டுங்கள். 

தமிழ் இளைஞர்களுக்கு நீங்கள் நடத்திய அரசியல் வகுப்புக்கள் எத்தனை? உங்களால் தீர்த்து வைக்கப்பட்ட பொதுமக்களின் குறைபாடுகளைச் சொல்லுங்கள். இந்தக் கேள்விகளை நெஞ்சை நிமிர்த்திக் கேளுங்கள். உங்கள் கேள்விகளுக்கு சரியான பதில் கிடைக்கிறதா? என்பதை பாருங்கள். முகத்துக்கு அஞ்சி வாக்களிக்காதீர்கள். நடிப்பும் போலிப் பிரசாரமும் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நம்பாதீர்கள். 

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேட்பாளர்களாகப் போட்டியிடுபவர்கள் கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்காக ஆற்றிய வகிபங்கை உங்கள் மனச்சாட்சி என்னும் தராசில் இட்டு நிறுவை செய்யுங்கள். பாராளுமன்றப் பதவியில் இருந்தவர்கள்- இருக்காதவர்கள் என்ற வேறுபாட்டையும் உங்கள் நிறுவையில் கணித்துக் கொள்ளுங்கள். இப்போது உங்கள் தீர்ப்பை வழங்குங்கள். உங்கள் தீர்ப்பு நிச்சயம் கிருஷ்ணன் அளித்த தீர்ப்பாக அமையும்.