அமைச்சர் பதவியை விட்டு விலகத் தயாராகும் மகிந்தவின் விசுவாசிகள்
தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான சில அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், விரைவில் தமது பதவிகளை விட்டு விலகலாம் என்று, இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
‘ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மத்திய குழுவைக் கூட்டி, தொடர்ந்தும் தாம் ஐதேக அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதா இல்லையா என்று இறுதி முடிவு ஒன்றை எடுக்குமாறு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேம்ஜெயந்தவிடம் சில அமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நான் எனது பதவியை விட்டு விலக முடிவு செய்துள்ளேன். ஆனால் கட்சியின் முடிவு இல்லாமல் என்னால் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்ப முடியாது. ஏனென்றால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மத்திய குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமையவே நான் பதவியை ஏற்றுக்கொண்டேன். எனவே நாம் பதவி விலகுவதற்கும், மத்திய குழு அங்கீகாரம் அளிக்க வேண்டும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட அறிக்கை, ஏமாற்றத்தை அளித்தது. அது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பரப்புரைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. நான் அரசியலில் இருந்து விலகிக் கொண்டால் அம்பாந்தோட்டையில் ஐதேகவுக்கு சாதகமான நிலை ஏற்பட்டு விடும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மத்திய குழு அங்கீகாரம் அளித்தால் தாமும் பதவி விலகப்போவதாக, அமைச்சர் ரெஜினோல்ட் குரேயும் தெரிவித்துள்ளார். மகிந்த அமரவீர, ரெஜினோல்ட் குரே, பியசேன கமகே, ஜனக பண்டார தென்னக்கோன், பீலிக்ஸ் பெரேரா, லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன ஆகிய அமைச்சர்கள் விரைவில் பதவி விலகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்தவர்களான, துமிந்த திசநாயக்க, எஸ்.பி.திசநாயக்க, சரத் அமுனுகம, விஜித் விஜேமுனி சொய்சா, ஏ.எச்.எம். பௌசி ஆகியோர் தொடர்ந்தும் அமைச்சர்களாகப் பதவியில் இருப்பர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.