மகிந்தவை முந்தினார் ரணில்
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் இருபிரதான கட்சிகளும், அரச பணியாளர்களுக்கான சம்பள அதிகரிப்பை முக்கிய வாக்குறுதியாக முன்வைத்துள்ளன.
அண்மையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தாம் பதவிக்கு வந்ததும் அரச பணியாளர்களின் ஆகக்குறைந்த சம்பளத்தை 25ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப் போவதாக, வாக்குறுதி அளித்திருந்தார்.
இந்தநிலையில், இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று, எல்பிட்டியவில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போது , அரச பணியாளர்களின் ஆகக்குறைந்த சம்பளத்தை 31ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப் போவதாக உறுதியளித்துள்ளார்.
அத்துடன் வரும் செப்ரெம்பர் மாதம் தொடக்கம் அரச பணியாளர்களுக்கு அடிப்படைச் சம்பளத்துடன், 10 ஆயிரம் ரூபா சலுகைக் கொடுப்பனவும் வழங்கப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.
ஆகக்குறைந்த அடிப்படைச் சம்பளம் தொடர்பாக மகிந்த ராஜபக்ச அளித்துள்ள வாக்குறுதியை விடவும், 6 ஆயிரம் ரூபா அதிகமாக தமது ஆட்சி வழங்கும் என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் முதல்வாரத்தில் அரச பணியாளர்களில் கணிசமானோர் அஞ்சல் மூலம் வாக்களிக்கவுள்ள நிலையில், இரு பிரதான கட்சிளும் சம்பள அதிகரிப்பு தொடர்பான வாக்குறுதிகளை அள்ளிவீசி வருவது குறிப்பிடத்தக்கது.