கூட்டமைப்பு என்னைப் பற்றி பேசுவதைக் கேட்டு வேதனைப்படுகின்றேன் - ஹக்கீம்
திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் கூட்டணி சேர்ந்தால் மாவட்டத்தினை வெல்வது இந்தக் கூட்டணியைத் தவிர தங்களால் இயலாது
என்ற ஒரே காரணத்தினால்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை என்னைப் பற்றித் தாறுமாறாக பேசி வருகிறது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கிண்ணியா நகர சபை மைதானத்தில் நேற்றுநடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தவிசாளரும் மூதூர் தொகுதி அமைப்பாளரும் வேட்பாளருமான எம்.ஏ.எம்.மஹ்ரூப் தலைமையின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் ரிஸாத் பதூர்தீன், தயாகமகே, இம்ரான் மஹ்ரூப், எம்.எஸ்.தௌபீக், கே.எம்.ஸாஹீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் அவர் கூறுகையில் திருகோணமலை மாவட்டத்தில் போனஸ் ஆசனத்தோடு இரண்டு உறுப்பினர்களை வென்றெடுப்போம். இது கடந்த கால தேர்தல்கள் அதன் முடிவுகள் போதுமானவை.
அட்டூழிய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்காக நாங்கள் மைத்திரிக்கு ஆதரவு வழங்கினோம். கடந்த ஆட்சியில் திருகோணமலை மாவட்டத்தில் நிருவாக உத்தியோகத்தர்களாக இராணுவ அதிகாரிகளை வைத்துக் கொண்டு அடக்கு முறை ஆட்சி செய்வதும் பொலிஸாரை உயர் அதிகாரிகளாக நியமிப்பதும் 19 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவு வழங்கியதன் மூலம் இவை இல்லாமல் செய்யப்பட்டது.
முஸ்லிம் காங்கிரஸூம் சேர்ந்தால் மாவட்டத்தை வெல்வது இந்தக் கூட்டணியைத் தவிர தங்களால் இயலாது என்ற காரணத்தினால் இவ்வாறான கருத்துக்களை காட்டமாகப் பேசுகின்றார் என்று நினைக்கின்றேன். அதற்காக நான் சம்பந்தனை கோபித்துக் கொள்ளப்போவதில்லை.
அவருடைய அரசியல் உரிமை எங்களை விமர்சிப்பதாக இருந்தால் விமர்சித்து விட்டுப் போகட்டும் இருந்தாலும் ஒரு நேச சக்தியாக இருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியோடு சேர்ந்து அமைச்சுப் பதவிகளையும் பெற்றுக் கொண்டு பலமான ஆட்சியாக மாறவேண்டும் என்பதே எமது விருப்பமாகும் என அவர் கூறினார்.