கொழும்பு துறைமுகநகரத் திட்டத்தை நிறுத்துமாறு இந்தியா அழுத்தம் கொடுக்கவில்லை - மஹேஷினி
கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை நிறுத்துமாறு, இலங் கைக்கு இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுத்ததாக, வெளியான தகவல் களை இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் நிராகரித்துள் ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னேயிடம், சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்பட்ட கொழும்புத் துறைமுக நகரத் திட்டப் பணிகளை நிறுத்துமாறு இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுத்ததா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், அத்தகைய செய்தியில் உண்மையில்லை என்று தெரிவித்தார். அதேவேளை, கொழும்புத் துறைமுகத் திட்டம் தொடர்பாக இந்தியா கவலை கொண்டிருந்தது என்று, இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அண்மையில் கூறியிருந்தது தொடர்பாக, கருத்து எதையும் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதற்கு சுமார் ஒரு வாரம் முன்னதாக, கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் இடைநிறுத்தியது.
அண்மையில் கொழும்பில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய கோத்தாபய ராஜபக்ச, தாம் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் பாதுகாப்புச் செயலராக இருந்த போது, தம்மைச் சந்தித்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதால் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டதாக குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.