Breaking News

மகிந்த தேர்தலில் போட்டியிட்டால் வியாழகுரு அவரை சும்மா விடாது

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்­ போட்டியிடுவாரா?
என்பது பற்றிய முடிவுகள் இதுவரை தெரியவில்லை. போட்டிடுவார் என்கிறது ஒரு தரப்பு. போட்டியிட மாட்டார் என்பது மற்றொரு தரப்பின் முடிவு.பொதுப் பார்வையில் தேர்தலில் குதிப்பது போல மகிந்தனார் காட்டாப்புக் காட்டுகிறார் என்ற கருத்தும் உண்டு.

எது எப்படியாயினும் இந்த நாட்டில் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்­வுக்கு இந்த நாட்டின் ஒரு பிரஜை என்ற வகையில் சாத்திரம் சொல்வது கடமை என்று கருதுகிறோம். அட! முன்பும் சாத்திரம் கேட்டுத்தானே அந்தாள் கவுண்டு போனது என்று நீங்கள் நினைக்கலாம். இது குணதாஸவின் சாத்திரம் அல்ல. ஆகையால் இந்தச் சாத்திரத்தைக் கேட்பது நல்லது. 

அதாவது, கெடுகாலமுள்ள ஒருவருக்கு திருமணம் நடைபெறப் போகிறது என்று எடுத்துக் கொள்வோம். கெடுகாலத்திலும் நல்லது நடக்கிறது என்று மற்றையவர்கள் நினைக்கலாம். இங்குதான் ஒரு உண்மையை உணரத் தவறுகிறோம். கெடுதி என்பது மங்களகரமான காரியத்தினூடாகவும் அணுகலாம் என்பதுதான் அந்த உண்மை. கெடுகாலத்தில் திருமணம் செய்து கொண்டால், துன்பம் திருமணத்தினூடாக அணுகப்போகிறது என்பது சோதிட சங்கதி. இது போலத்தான் மகிந்த ராஜபக் வின் நிலைமையும் உள்ளது. 

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நானே வெற்றி பெறுவேன் என்று நம்பியிருந்த மகிந்த தோல்வி கண்டார்.தேர்தலை நடத்தாமல் இருந்திருந்தால், இன்னும் இரண்டு ஆண்டுகள் ஜனாதிபதிப் பதவியில் இருந்திருக்கலாம். என்ன செய்வது காலம் பிழைத்தால் மகிந்தவும் எதுவும் செய்யமுடியாதென்பது நியதி.

இரண்டு ஆண்டுகள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பதவியில் இருக்க வேண்டிய மகிந்த, அதனை இழந்துவிட்டு இப்போது பொதுத் தேர்தலில் போட்டியிட முற்படுவது; தன் மீது ஏற்படக்கூடிய விளக்கம், விசாரணைகளை தடுக்க என்பது தெரிந்த விடயம். பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெல்வதன் மூலம் தப்பித்துக் கொள்ளலாம் என்று அவர் நினைக்கிறார். 

ஆனால் உண்மையில் பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் - அரசியலில் இருந்து நிரந்தரமாக ஓய்வு பெறுகிறேன் என்று மகிந்த அறிவிப்பதன் மூலமே தப்பித்துக் கொள்ளலாம் என்பதை அவர் மறந்துள்ளார். ஆம்! மகிந்தவை வீட்டுக்கு அனுப்புவதில் அமெரிக்கா என்ற வியாழகுரு கடுமையாகப் பலன் செய்தது.மகிந்தவை வீட்டுக்கு அனுப்பி மைத்திரியை ஜனாதிபதி ஆக்குவதில் வியாழகுருவாகிய அமெரிக்கா தீட்டிய திட்டங்கள் ஏராளம். மகிந்த வீடு சென்றதும் வியாழகுரு அமைதியடைந்தது.

ஆனால் மீண்டும் மகிந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவாராயின், அது வியாழகுருவுக்குக் கடுங்கோபத்தை உண்டு பண்ணும். இதனால் மகிந்த கடும் துன்பத்தை அனுபவிக்க வேண்டி வரும். மகிந்த மீது சர்வதேச விசாரணை நடத்தி, அவரைக் குற்றவாளியாக அறிவித்து, அவரைக் கைது செய் என்று அமெரிக்க வியாழகுரு நினைக்கலாம். ஆகையால் மகிந்தனார் பேசாமல் வீட்டில் இருப்பதே புத்திசாலித்தனம் என்பது நம் சோதிடம்.

இதை கருத்தில் கொள்ளாமல் இதோ தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்று செய்து காட்டுகிறேன் பார் என்று மகிந்த ராஜபக்­ நினைத்தால், கெடுகாலம் அவரை அப்படி நினைக்க வைக்கிறது. வியாழ சுகம் இல்லாமல் எவரும் எதுவும் செய்ய முடியாது.