மகிந்தவுக்கு ஆதரவாக கீழ்த்தரமான பரப்புரையில் சீனா ஈடுபடாது – என்கிறார் மங்கள
நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சீனா ஆதரவளித்து வருவதான குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைக்கு சீனா நிதி அளித்துள்ளதாக ஆதாரமற்ற செய்திகள் வெளியாகியுள்ளதை நான் அறிவேன். இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை. சீன அரசாங்கம் இவ்வாறான கீழ்நிலைக்கு இறங்கும் என்று நான் நம்பவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் போது சீன நிறுவனங்கள் மகிந்த ராஜபக்சவின் பரப்புரைக்கு நிதி அளித்ததான குற்றச்சாட்டுக் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற சூழலிலேயெ மங்கள சமரவீர இவ்வாறு கூறியுள்ளார். தாம் ஆட்சிக்கு வந்தால், இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள சீனாவின் உதவியுடனான திட்டங்கள் அனைத்துக்கும் அனுமதி அளிக்கப்படும் என்று மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.