22 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் மஹிந்த தலைமையிலான அணியை தோற்கடிப்போம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை தேர்தல் போட்டிக் களத்திற்கு வரவேற்கின்றோம். அவரது மீள்வருகை எமக்கு சவால் அல்ல. நாம் போட்டிக்கு தயாராகவே உள்ளோம்.
இம்முறை தேர்தலில் ராஜபக் ஷவினரின் அரசியலுக்கு முடிவு கட்டும் முகமாக, வரலாற்றில் தடம்பதிக்கும் வகையில் 22 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் மஹிந்த தலைமையிலான அணியைத் தோற்கடிப் போம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி பொதுச்செயலாளரும், அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித் தார்.
மக்களினால் நிராகரிக்கப்பட்ட தலைவர் மீளவும் அரசியலில் பிரவேசிப்பதனால் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இம்முறை தேர்தலில் பெரும்பான்மை வெற்றியை பெற்று நாமே ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாக உத்தியோகபூர்வமாக நேற்று அறிவித்திருநத்தார். இந்த அறிவிப்பு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசமிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். எனவே மஹிந்தவை தேர்தல் போட்டி களத்திற்கு நாம் வரவேற்கின்றோம். பாராளுமன்ற தேர்தலில் அவர் தாராளமாக போட்டியிடட்டும். இதில் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஷ 18 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றிருந்தார். அதேபோன்று கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, சுமார் நான்கு இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்விக் கண்டிருந்தார். எனவே 18 இலட்சம் வாக்குகளினால் வெற்றிக் கொண்டிருந்த மஹிந்த ராஸபக்ஷ, நான்கு இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியும் கண்டார். எனினும் இம்முறை பாராளுமன்ற தேர்தலின் போது மேற்குறித்த இருதொகையையும் சேர்த்து, 22 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வரலாற்று ரீதியான தோல்வியை மஹிந்த ராஜபக்ஷவிற்கு நாம் பெற்றுக் கொடுப்போம்.
இந்நிலையில் மக்கள் தோல்வி அடையச்செய்த, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வருகை எமக்கு ஒருபோது சவாலாக அமையாது. இந்த பாராளுமன்ற தேர்தலில் மஹிந்தவின் வருகையினால் நாம் அச்சம் அடைய மாட்டோம்.
சுமார் பத்து வருடமாக நாட்டை ஆட்சி செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் செய்ய முடியாததை பாராளுமன்றத்தின் சிறுப்பான்மை அரசாங்கம் என்ற வகையில் பல சாதனைகளை நாம் படைத்துள்ளோம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய ஆட்சியில் மக்களுக்கு பல்வேறு சலுகைகளை பெற்றுக் கொடுத்தோம். அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என்று அலட்டிக்கொண்டிருந்த முன்னைய அரசின் செயற்பாட்டிற்கு பதிலளிக்கும் வகையில், இடைக்கால வரவு செலவு திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்தோம்.
மேலும் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் நிறைவேற்றி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையிலுள்ள சர்வதிகார போக்குடன் கூடிய அதிகாரங்களை நீக்கினோம். எனினும் தேர்தல் மறுசீரமைப்பினை எம்மால் செயற்படுத்த முடியாமல் போனது. அத்தோடு மேலும் பல முக்கியமான சட்டமூலங்களை எம்மால் கொண்டு வருவதற்கு மஹிந்த ஆதரவு அணியினர் பெரும் தடையாக இருந்தனர். மக்களுக்கு பல்வேறு சலுகைகளை பெற்றுக்கொடுக்க போராடிய போதிலும் அதற்கு எதிர்க்கட்சிகள் இடமளிக்கவில்லை.
எனவே நாட்டின் நலனை கருத்திற் கொள்ளாது தனது சுய நலனுக்காக மீளவும் ஆட்சிப்பீடமேற மஹிந்த ராஜபக்ஷ முனைகின்றார். மேலும் திருடர்கள் தம் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டிலிருந்து மீளுவதற்காக மஹிந்தவை துரும்பு சீட்டாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே மஹிந்தவை தோற்கடித்து, இலங்கையை பொருளாதார ரீதியாக வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வருவோம் என்றார்.