மஹிந்தவை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் - அனுரகுமார திஸாநாயக்க
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சட்டத்தின் முன் நிறுத்த ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்டால் அவரை சட்டத்தின் முன் நிறுத்த தேவையான சகல ஒத்துழைப்பையும் வழங்கத் தயார்.இதற்கு முன்னதாகவும் விசாரணைகளுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளளோம்.
கடந்த அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகளை நாமே செய்துள்ளோம். எனினும் அதிகளவு முறைப்பாடுகளை ஐக்கிய தேசியக் கட்சியே செய்திருக்க வேண்டும்.ஒவ்வொரு அமைச்சுகளையும் பொறுப்பேற்றுக் கொண்ட போது ஊழல் மோசடிகள் பற்றிய ஆதாரங்கள் கிடைத்திருக்கும். அதன் அடிப்படையில் முறைப்பாடு செய்திருக்க முடியும். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி முறைப்பாடுகளைச் செய்யவில்லை.
மஹிந்த ராஜபக்சவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இனவாத பிரசாரத்திற்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை உருவாக்க வேண்டும். மஹிந்தவின் அரசியல் மீள் பிரவேசத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கைகள் வழியமைத்தன.
மஹிந்த ராஜபக்சவிற்கு எதிரான விசாரணைகளை சுயாதீனமாக மேற்கொள்ள பொலிஸாருக்கும் நீதிமன்றிற்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஜனாதிபதியும் பிரதமரும் விசாரணைகளை ஸ்தம்பிதமடையச் செய்தனர். ஜே.வி.பி நாட்டை கட்டியெழுப்பும் கொள்கையொன்றை முன்னெடுத்து வருகின்றது. வெறும் யோசனைத் திட்டங்களுக்கு மட்டும் வரையறுக்காது அமுல்படுத்தப்படுத்தக்கூடிய திட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக அனுரகுமார திஸாநாயக்க சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.