Breaking News

மக்கள் வென்றெடுத்த ஜனநாயகத்தை மஹிந்த சீர்குலைக்கப் பார்க்கிறார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே னவை புறந்தள்ளிவிட்டு மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ன ணியை கைப்பற்றும் சூழ்ச்சியை மஹிந்த ராஜபக்ஷ மேற்கொள் வதோடு மக்கள் வென்றெடுத்த ஜனநாயகத்தை மீண்டும் சீர்குலை க்கப் பார்க்கின்றார்

என அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார். நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த மீண்டும் மஹிந்தவை தோற்கடிப்போம் எனவும் குறிப்பிட்டார் .

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக கொண்டுவருவோம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தொடர்ச்சியாக குறிப்பிட்டுவரும் நிலையில் இது தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,

மக்கள் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற காரணத்தினால் தான் மஹிந்த ராஜபக் ஷவை ஆட்சியில் இருந்து வீழ்த்தினர். நாட்டில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை மக்கள் ஆதரிக்கின்றனர். அந்த மாற்றத்தை தொடர்ந்தும் தக்கவைக்க வேண்டும் என்ற நிலைபாட்டில் மக்கள் உள்ளனர். அதேபோல் நாம் கடந்த காலத்தில் மஹிந்த அரசாங்கத்தில் இருக்கும் போதும் இந்த நாட்டை ஒற்றுமைப்படுத்தவே முயற்சித்தோம்.

அதேபோல் இந்த நாட்டில் யுத்தம் முடிவுக்கு வரவும் நாம் முக்கிய பங்காற்றினோம். ஆனால் மஹிந்த அரசாங்கம் ஒரு கட்டத்தில் நாட்டின் ஜனநாயகத்தை மதிப்பளிக்காது தமது குடும்ப ஆட்சியை தக்கவைக்கவே அதிகமாக முயற்சித்தனர். ஆகவே மக்களின் எதிர்ப்பை சம்பாதித்து தொடர்ந்தும் மஹிந்த ஆட்சியில் இருப்பது மக்களுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். அதன் காரணத்தினாலேயே நாம் மஹிந்த அணியை விட்டு வெளியேறினோம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த அரசாங்கத்தை வீழ்த்துவோம் என்ற சவால் விடுத்தோம். அதற்கேற்ப நாம் மக்களை மஹிந்தவுக்கு எதிராக அணிதிரட்டி மஹிந்தவை தோற்கடித்தோம். நாட்டில் சர்வாதிகார ஆட்சியை வீழ்த்தி ஜனநாயக ஆட்சியை உருவாக்கினோம். ஆனால் நாம் வென்றெடுத்த ஜனநாயக ஆட்சியை சீரழித்து மீண்டும் குடும்ப ஆட்சியை கொண்டுவரவே மஹிந்த அணியினர் முயற்சிக்கின்றனர். மஹிந்தவை தலைமையில் கொண்ட அவரது ஆதரவாளர்கள் கூட்டம் மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.

இதற்கு மக்கள் ஒரு போதும் இடம் கொடுக்கக் கூடாது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் மஹிந்தவை களம் இறக்கியிருப்பது கட்சிக்கு நல்லதல்ல. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை புறம் தள்ளி மீண்டும் கட்சியின் தலைமையை மஹிந்த கைகளில் கொடுக்கும் சூழ்ச்சி மேற்கொள்ளப்படுகின்றது. ஆனால் இது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தெரியும். அவர் கட்சியின் ஒரு சிலரின் சூழ்ச்சித் திட்டங்களை தெரிந்து வைத்துள்ளார். ஆனால் கட்சியின் அழுத்தமும் கட்சியை பிளவுபட விடக்கூடாது என்ற நிலைப்பாட்டிலும் உள்ளார். ஆனால் நாட்டுக்கு மீண்டும் அழுத்தங்கள் ஏற்படுத்தும் ஆட்சி பாதையை ஏற்படுத்த ஜனாதிபதி இடம் கொடுக்க மாட்டார்.

இப்போதும் அவர் ஜனநாயகத்தின் பக்கமே உள்ளார். அதேபோல் ஐக்கிய தேசிய முன்னணியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஒன்றிணைந்து மீண்டும் நாட்டில் நல்லாட்சியை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் செயற்பட்டு வருகின்றோம். அதேபோல் நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரு நோக்கத்தை கவனத்தில் கொண்டே நாம் மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியை தோற்கடித்தோம். அதேபோல் இப்போதும் நாம் வென்றெடுத்த ஜனநாயகத்தை தக்கவைக்க மீண்டும் மஹிந்த ராஜபக் ஷவை தோற்கடிப்போம். நாம் மக்களுடன் ஒன்றினைந்து மீண்டும் நாட்டில் நல்லாட்சியை உருவாக்குவோம் எனக் குறிப்பிட்டார்.