மகிந்த நாட்டிற்கு உயிரூட்ட அவசியமில்லை : ரணில்
மகிந்த ராஜபக்ஷ நாட்டிற்கு உயிரூட்ட வேண்டிய அவசியமில்லை. அவர் அந்த நிலையிலும் இல்லை. அவருக்கு சேலைன் ஊட்ட வேண்டியதே தற்போதைய நிலையில் மிகவும் அவசியமானது. அவர் மூன்றாவது முறையாகவும் அரசியலில் பிரவேசித்துள்ளார்.
இம்முறை தேர்தலுடன் அவரது அரசியல் கடவுச்சீட்டை இல்லாமல் செய்வதற்கு, மக்கள் இம்முறை ஒன்றிணைவார்கள் நாட்டு மக்களின் பொருளாதாரம், கல்வி, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் உள்ளிட்ட ஐவகை அபிவிருத்திகளை மேற்கொண்டு, நவீன இலங்கையை உருவாக்க ஐந்தாண்டு வேலைத்திட்டதினை முன்வைத்துள்ளோம். இதனை நடைமுறைப்படுத்த நடைபெறப்போகும் பொதுத்தேர்தலில் ஐ.தே.க. அமோக வெற்றியடைய வேண்டுமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
ஹாலி-எல பொது மைதானத்தில் நடைபெற்ற ஐ.தே.க. பிரசார கூட்டத்தின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து பிரதமர் பேசுகையில், மகிந்த ராஜபக்ச நாட்டிற்கு உயிரூட்டுமாறு மக்களை கேட்டுவருகின்றார். அவரது ஆட்சி காலத்தில் பத்து வருடங்களாக மகிந்த ராஜபக்சவினால், நாட்டு மக்களின் மேம்பாடுகள் எதுவும் இடம்பெறவில்லை என்பது அவரது உரையின் மூலம் வௌிப்படையாகின்றது. அவரது காலத்தில் அவரது கூட்டத்தினரே, சுகபோக வாழ்க்கையை அனுபவித்தனர்.
மகிந்த ராஜபக்ச நாட்டிற்கு உயிரூட்ட வேண்டிய அவசியமில்லை. அவருக்கு சேலைன் ஊட்டவேண்டியதே, தற்போதைய நிலையில் அவசியமாகும். அவர் மூன்றாவது முறையாகவும் அரசியலில் பிரவேசித்துள்ளார். இம்முறை தேர்தலுடன் அவரது அரசியல் கடவுச்சீட்டை இல்லாமல் செய்வதற்கு, மக்கள் இம்முறை ஒன்றிணைவார்கள் என்பது எனது நம்பிக்கையாகும்.
நடைபெறப்போகும் தேர்தலின் பின்னர், ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி அமைந்ததும், தோட்டத் தொழிலாளர்களின் மேம்பாடுகள் விடயமாக, விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளேன். தோட்ட தொழிலாளர்களுக்கு ஏழுபேர்ச் காணி வழங்கும் விசேட செயற்பாடுகள், தற்போதைய நிலையிலேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எமது ஐந்தாண்டு வேலைத்திட்டத்தில் காணி வழங்கும் திட்டமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அத்துடன், பதுளை மாவட்டத்தின் ஐந்து தமிழ்ப் பாடசாலைகளை விஞ்ஞான பாடசாலைகளாக தரமுயர்த்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
எமது ஐந்தாண்டு வேலைத்திட்டத்தின் போது பத்து இலட்சம் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். மேலும் சர்வதேச நாடுகள் பல, எமது நாட்டில் தொழில் முதலீடு செய்வதற்கு ஆயத்தமாக இருந்து வருகின்றனர். அத்துடன், பெருந் தொழிற்சாலைகள் பலவற்றையும் ஆரம்பிக்கவும், வௌிநாடுகள் பல முன்வந்துள்ளன.
நல்லாட்சியின் நூறு நாள் வேலைத்திட்டத்தில், அரச ஊழியர்களுக்க பத்தாயிரம்ரூபா சம்பள உயர்வை வழங்கியுள்ளோம். அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளோம். குறைக்க முடியாதிருந்த எரிபொருள் விலையையும் குறைத்துள்ளோம். சிறு தேயிலை தோட்டங்களின் அபிவிருத்தி கருதி, நிவாரண உதவிகளை வழங்கியுள்ளோம். இந்நிவாரண உதவிகளை வழங்குவதற்கு, தேவையான நிதி செப்டெம்பர் மாதம் வரை இருப்பில் இருக்கின்றது.
இளைஞர், யுவதிகளுக்கு நவீன தொழிநுட்ப வசதிகளை ஏற்படுத்தும் முகமாக சகல வசதிகளுடன் கூடிய தொழிற்பயிற்சி நிலையங்களை ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், பழச்செய்கையை ஊக்குவிக்கவும், சிறு விவசாயிகளை ஊக்குவிக்கவும், அரசு ஏற்பாடுகளை செய்து வருகின்றது என்றார்.
வேட்பாளர் வடிவேல் சுரேஷ்
ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சரும், பதுளை மாவட்ட ஐ,தே.க. வேட்பாளருமான வடிவேல் சுரேஷ் பேசுகையில், பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயமாக, பிரதமர் ரணில்விக்கிரமசிங்க உடனடியாக தலையீடு செய்யவேண்டும். இது குறித்து நீண்ட மகஜறொன்றையும் பிரதமரிடம் இன்று கையளித்துள்ளேன். தோட்ட தொழிலாளர்களை எவராவது ஏமாற்ற நினைப்பார்களே ஆனால், அவர்களுக்கெதிராக பாரிய தொழிலாளர் போராட்டமொன்றை மேற்கொள்ளவும், நான் தயாராகவுள்ளேன்.
இச் சம்பள உயர்ைவை முன்னிலைப்படுத்தி, கூட்டு ஒப்பந்தம்சார் பிரதான தொழிற்சங்கமொன்று தொழிலாளர்களை, பகடைகாய்களாக பாவித்து வருகின்றனர். பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுகொடுக்கும் முகமாக இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதம் அரும் பாடுபட்டுவருகின்றார்.
நடைபெறப்போகும் தேர்தலில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும்முகமாக, என்னையும், அண்ணன் அரவிந்தகுமாரையும் வெற்றிபெற செய்யவேண்டிது எமது மக்களின் தார்மீகக் கடமையாகும்என்றார்.
வேட்பாளர் அ.அரவிந்தகுமார்
பதுளை மாவட்ட ஐ.தே.க. வேட்பாளர் அ.அரவிந்தகுமார் பேசுகையில், பதுளை மாவட்டத்தின் ஐ.தே.க.வின் வெற்றி உறுதிபடுத்தப்பட்டிருந்த போதிலும், தமிழர் பிரதிநிதித்துவங்களை தக்கவைக்க வேண்டியது காலத்தின் அவசிய தேவையாகும். தமிழ் பேசும் மக்கள் அனைவரும் தொழிற்சங்க, அரசியல் வேறுபாடுகளை மறந்து, ஐ.தே.க.வின் தமிழ் வேட்பாளர்கள் இருவரையும் வெற்றிபெற வைக்கவேண்டும்என்றார்.