பிரதமரை நியமிக்கும் அனைத்து அதிகாரங்களும் ஜனாதிபதியிடம் - அமைச்சர் விஜயதாஸ
அரசியலமைப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள 19 ஆவது திருத்தச் சட்டத்தின்படி நாட்டில் பிரதமர் ஒருவரை நியமிக்கும்அனைத்து அதிகாரங்களும் ஜனாதிபதிக்கே இருப்பதாக அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாட்டின் பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்திருப்பதில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நீதி அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தருமான விஜயதாஸ ராஜபக் ஷ மேற்கண்டவாறு கூறினார்.
இதன் போது அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்
நாட்டின் பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது எனவும் பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவே பிரதமரை தெரிவு செய்வதற்கு அவசியம் எனவும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்துள்ளமையானது உண்மைக்கு புறம்பானதாகும்.
அன்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19 ஆவது திருத்தச்சட்டத்தின் படி நாட்டின் பிரதமர் ஒருவரை நியமிக்கும் அனைத்து அதிகாரங்களும் ஜனாதிபதிக்கே காணப்படுகின்றது.இவ்வாறான நிலையில் ஒரு நாட்டின் பிரதம நீதியரசராக கடமையாற்றிய ஒருவர் இவ்வாறு போலியான கருத்துக்களை முன்வைப்பது மிகவும் கண்டிக்கதக்கது. சரத் என்.சில்வா பணியாற்றிய காலத்தில் வழங்கிய உயர் நீதிமன்ற தீர்ப்புக்களும் இவ்வாறே அமைந்திருக்கும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
முன்னாள் நீதியரசர் என்ற ரீதியில் இவ்வாறான போலியானதும் சட்டத்திற்கு முரணானதுமான கருத்துக்களை வெ ளியிடுவதை அவர் தவிர்த்து கொள்ள வேண்டியது அவசியமானது.
வேட்புமனு
எதிர்வரும் பொதுதேர்தலில் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு சிலருக்கு வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை. இதற்கான காரணம் தோல்வி பயமே ஆகும்.
ஜக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் இன்று போட்டியிடும் வேட்பாளர்கள் பெரும்பாலானோர் ஊழல் மற்றும் போதைப்பொருள் வர்த்தக செயற்பாடுகளில் தொடர்புடையவர்கள் ஆவர். இவர்கள் தொடர்பான விசாராணைகளும் சட்டப்படி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அந்தவகையில் கடந்தக் காலங்களில் ஒரு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறான நிலையிலேயே இம்முறை ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் கொழும்பை பிரதிநிததுவப்படுத்தி போட்டியிடும் சில வேட்பாளர்களுக்கு இம்முறை வேட்புமனு வழங்கப்பட வில்லை.
இதற்கான காரணம் இம்முறை கூட்டமைப்பின் சில முக்கியஸ்த்தவர்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட்டால் தோற்றுவிடுவர் என்ற அச்சமே ஆகும்.இன்று ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக பலருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் வேட்பு மனு வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டு வந்தபோதிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் பெரும்பாலானவர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளை கொண்டவர்கள் ஆவர்.
இன்று முன்னாள் ஜனாதிபதியும் ஜக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் சார்பில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ இனவாத பிரச்சரங்களை முன்னெடுத்து தேர்தலின் பின்னர் ஒரு சில கட்சிகளை ஒன்றினைத்து ஆட்சியமைக்கலாம் என கனவு காண்கின்றார் இவரின் கனவானது கனவாகவே அமையும் இதற்கு மக்கள் ஒரு போதும் அனுமதி வழங்கப்போவது இல்லை என்றார்.