Breaking News

நேர்மையான வேட்பாளர்களை இனங்காண மக்கள் தயாராக வேண்டும்

பொதுத் தேர்தல் - 2015 நடந்து முடியும் வரை பொதுமக்களுக்குப் பெரும் குழப்பமாகவே இருக்கப் போகிறது.



யாரை நம்புவது? எது உண்மை? என்று எதுவும் தெரியாத சூழ்நிலைக்குள் பொதுமக்கள் அகப்பட்டு அல்லலுறுவது தவிர்க்க முடியாத தொன்றாகிவிட்டது. வட புலத்தில் பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வது கடினமான காரியமாகி உள்ளது.

ஒரு சீற் தாருங்கள் என்று கேட்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆசனம் கிடைக்காதவர்கள் குறித்த கட்சிக்கு எதிராகச் செயற்படுவர் என்பதும் உண்மை. எதுவாயினும் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேவையான எண்ணிக்கை கொண்ட வேட்பாளர்களைத் தெரிவு செய்து களமிறங்குவது கட்டாயம்.

அதேநேரம் அரசியல் தலைமையில் உள்ளவர்கள் தங்களின் வெற்றியை உறுதிப்டுத்தும் வகையிலேயே வேட்பாளர்களைத் தெரிவு செய்வர். எனவே கட்சிகளின் வேட்பாளர் நியமனம் என்பது தமிழ் மக்களுக்காகப் பாடுபடக்கூடியவர்கள் என்பதாக இல்லாமல், நம்மைவிட இவருக்கு மக்கள் ஆதரவு குறைவு என்ற நிலையில் இருக்கக் கூடியவர்களே வேட்பாளர்களாகத் தெரிவு செய்யப்படுவர்.

எது எப்படியோ! எதிர்வரும் ஆகஸ்ட் 17ம் திகதி பாராளுமன்றத் தேர்தல். இதன் போது தமிழ் மக்கள் தங்களின் வாக்குகளை வழங்கி பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற பதவி கொண்ட மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வர்.

இவ்வாறு மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்கின்ற பொதுமக்கள் மிக நிதானமாக, தமிழ் மக்களுக்காகப் பாடுபட்டவர்கள்; நியாயத்துக்காக குரல் கொடுத்தவர்கள்; ஏமாற்றியவர்கள்; பாராளுமன்ற உறுப்பினர் என்ற பதவியில் இருந்து கொண்டு சுயலாபம் தேடியவர்கள்; கிடைத்த பதவியை தங்களின் சொந்த நலனுக்காகப் பிரயோகித்தவர்கள் என்ற அடிப்படையில் ஆராய்ந்து, அதில் தெளிவடைந்து தக்காருக்கு வாக்களிப்பதே தர்மம் ஆகும்.

இந்தத் தர்மத்தைச் செய்யத் தவறும் போது அந்தப் பாவம் பொதுமக்களையும் சூழ்ந்து கொள்ளும். வடக்கு மாகாணசபையின் முதலமைச்சராக ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை தெரிவு செய்ததன் காரணமாக அவர் தொடர்பில் தமிழ் மக்கள் நம்பிக்கையோடு உள்ளனர்.

நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு அரசியல் தெரியாது; உருட்டுப் புரட்டுத் தெரியாது; எவரையும் ஏமாற்றத் தெரியாது. அவரிடம் நேர்மையிருக்கிறது. நீதி இருக்கிறது. உண்மை இருக்கிறது. தமிழினத்தை ஒருபோதும் அவர் ஏமாற்றமாட்டார். தான் சார்ந்த கட்சியினர் என்றும் பாராமல் விமர்சிக்கின்ற நேர்மைத்திறன் இருக்கிறது. இத்தகைய ஒருவரை முதலமைச்சராக்காமல் இன்னொருவரை அந்தப்பதவியில் இருத்தியிருந்தால், தமிழினம் பெரும் துன்பப்பட்டிருக்கும்.

ஆகையால் அன்புமிகு தமிழ் மக்களே! எங்களுக்கு, நேர்மையான - நீதியான - மனித நேயம் மிக்க- என்னை நம்பிய மக்களுக்கு நான் துரோகம் செய்யக் கூடாது என்ற மனத்திடம் கொண்ட - தூய்மையானவர்களே தேவை. எனவே அத்தகையவர்களைப் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்வது நம் கடமை.