ஐபிஎல் இல் புதிதாக இரண்டு அணிகள்
2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி யில் சூதாட்டம் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
சூதாட்டத்தில் ஈடுபட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கௌரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு வாழ்நாள் தடை விதிக்கப் பட்டுள்ளது.
இருவரும் கிரிக்கெட் தொடர்பான எந்த நடவடிக்கைகளிலும் வாழ்நாள் முழுவதும் ஈடுபடக்கூடாது என்று லோதா தலைமையிலான விசாரணை குழு அறிவித்தது.
ஐபிஎல் அணிகளின் நிர்வாகிகளே சூதாட்டத்தில் ஈடுபட்டதால் அந்த அணிகள் விதிமுறைகளை மீறியுள்ளமையால் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் ஆரம்பமான 2008 ஆம் ஆண்டில் இருந்து 2015 ஆம் ஆண்டு வரை நடந்த அனைத்து ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களிலும் அரையிறுதிக்கு முன்னேறிய ஒரே அணி சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தான். வெற்றிகரமான அணி என்ற பெருமைக்குரிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 2 முறை கிண்ணத்தை வெற்றிகொண்டதுடன், 4 தடவை இறுதிச்சுற்று வரை வந்துள்ளது.
ஐபிஎல் உருவானதில் இருந்து சென்னை அணியின் தலைவராக திகழ்ந்தவர் 34 வயதான தோனி.
சூதாட்ட விவகாரத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளதால் 2016 ஆம் ஆண்டு ஐ.பி.எல். திட்டமிட்டபடி நடக்குமா? இவ்விரு அணி வீரர்களின் கதி என்ன? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள்எழுந்துள்ளது.
இதன் காரணமாக இனிவரும் ஐபிஎல். போட்டிகளில் 6 அணிகள் தான் விளையாடுமா? அல்லது புதிதாக 2 அணிகள் ஏலத்தில் எடுக்கப்படுமா? என்ற கேள்விகள் கிளம்பியுள்ளன.
கிரிக்கெட் வாரியத்தின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் 2 புதிய அணிகளை ஏலத்தில் எடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதனால் 2 புதிய அணிகள் ஏலம் முறையில் எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது .
இதற்காக புனே, கொச்சி, அகமதாபாத், இந்தூர், ராய்ப்பூர், ராஞ்சி, கான்பூர் ஆகிய 7 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 அணிகளை வாங்குவதற்காக ஏலத்தில் 8 பேர் போட்டியில் உள்ளனர்.
19 ஆம் திகதி நடைபெறும் ஐபிஎல் ஆட்சி மன்ற குழுவில் இதுபற்றி முடிவு செய்யப்படும். சென்னை, ராஜஸ்தான் அணிகளில் இடம் பெற்றுள்ள வீரர்கள் அனைவரும் ஏலத்தில் விடப்பட வாய்ப்பு உள்ளது.
சென்னை சுப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளை வேறு எந்த நிறுவனங்களாவது வாங்கினால் அந்த அணிகள் ஐபிஎல் போட்டியில் நீடிக்க முடியும். தற்போதைய உரிமையாளர்கள் வைத்திருந்தால் தான் அந்த அணிகள் 2 ஆண்டுக்கு ஐபிஎல் போட்டியில் பங்கேற்க முடியாது.