Breaking News

எமது இலக்கு 20 ஆசனங்கள், மக்களுக்கான தீர்வு 2016 இல் - சம்பந்தன் உறுதி

தமிழ் பேசும் மக்கள் வடக்கு, கிழக்கில் இம்முறை நல்லதொரு
வெற்றியை ஈட்டித்தருவார்கள் ஆனால் 2016ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கான தீர்வை நிச்சயம் பெற்றுத்தருவோம். எமது இலக்கு 20 ஆசனங்களாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தல் செயல்முறை தொடர்பில் கட்சியின் திருகோணமலை கிளைக் காரியாலயத்தில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் விளக்கமளித்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அரசியல் பயணத்தை முடிக்க விரும்புகிறது. 

எம்மைப் பொறுத்தவரை எமது அரசியல் பயணத்தை தொடர்ந்தும் நீடிக்க முடியாது. எமது அரசியல் பயணத்தை முடிக்க விரும்புகிறோம். தொடர்ந்தும் நீட்டிக்கொண்டுபோக நாம் விரும்பவில்லை. வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் நடைபெறவுள்ள தேர்தலில் உயர்ந்த வெற்றியொன்றை கூட்டமைப்புக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். 

தருவார்களானால் 2016ம் ஆண்டுக்குள் எமது மக்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வொன்றை கண்டே தீருவோம். அதற்கு மக்கள் ஆதரவு எமக்கு வேண்டும். நடைபெறவுள்ள தேர்தல் மிக முக்கியமானதாகும். இந்த தேர்தல் மூலம் ஏற்படும் விளைவுகள் எதிர்காலத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இதனை எமது அரசியல் பயணத்தில் முக்கியமான மைல் கல்லாக கருதவேண்டும். 

போர் முடிவடைந்த பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் கிழக்கு மாகாணசபை தேர்தலும் வட மாகாண சபை தேர்தலும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை இந்த மாதம் இறுதி வாரத்தில் வெளியிடவுள்ளோம். அதில் எமது அரசியல் இலக்கு உடனடித் தேவைகள் தமிழ் மக்களின் நிலைப்பாடுகள் அபிலாஷைகள் தொடர்பில் தெளிவாக கூறுவோம்’ என்றும் அவர் தெரிவித்தார்.