Breaking News

சுதந்திரக் கட்சியில் போட்டியிட மகிந்த விண்ணப்பிக்கவில்லை – ராஜித சேனாரத்ன

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி யிடுவதற்கு இடமளிக்குமாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சியிடம், மகிந்த ராஜபக்ச இன்னமும் அதிகாரபூர்வமாக விண்ணப்பிக்கவில்லை என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

“முறையான விண்ணப்பம் அனுப்பினால் மாத்திரமே, மகிந்த ராஜபக்சவுக்கு போட்டியிட வாய்ப்பளிப்பதா இல்லையா என்று முடிவெடுக்க முடியும். ஊழல், எத்தனோல், போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகள் இல்லாத சுத்தமான வேட்பாளர்களுக்குத் தான் இம்முறை போட்டியிட வாய்ப்பளிக்கப்படும்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் பிளவு ஏற்பட்டால் அதற்கான பொறுப்பு, மகிந்த ராஜபக்ச அணியினரையே சாரும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, மகிந்த ராஜபக்ச தரப்புக்கும், மைத்திரிபால சிறிசேன தரப்புக்கும் இடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்காக ஜோன் செனிவிரத்ன தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழுவின் அறிக்கை நேற்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், மகிந்த ராஜபக்சவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட அனுமதிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக நிறுத்தும் படி அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்படவில்லை என்று, குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.