Breaking News

வட கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே போட்டியிடுவது குறித்து பரிசீலிப்பு : மாவை

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வடகிழக்கு மாகாணங்களுக்கு வெளியேயும் போட்டியிடுவதற்கு பரிசீலித்துக் கொண்டிருப்பதாக தமிழரசு கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்திருக்கின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடகிழக்கு மாகாணங்களுடன் தனது அரசியலை மட்டுப்படுத்தாமல், அதற்கு வெளியேயும் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்ற அடிப்படையில் வெளியேயும் போட்டியிட வேண்டும். என நேற்றைய தினம் தமிழரசு கட்சியின் யாழ்.மாவட்ட உறுப்பினர்கள், கையொப்பமிட்டு கடிதம் ஒன்றினை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்களுக்கும், கூட்டமைப்பின் தலைவருக்கும் அனுப்பி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மேற்படி விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தமிழரசு கட்சியின் யாழ்.மாவட்ட உறுப்பினர்கள் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பாக நாங்கள் அறிந்திருக்கின்றோம். அந்த வகையில் மனோ கணேசனுடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்திருக்கின்றோம்.

இந்நிலையில் கொழும்பு, மற்றும் கம்பஹா மாவட்டங்களில் போட்டியிடுவது தொடர்பாகவும் அதனால் உண்டாகும் நன்மைகள் தொடர்பாகவும் நாங்கள் தற்போது ஆராய்ந்து கொண்டிருக்கும் நிலையில் எந்தவிதமான தீர்மானங்களும் நாங்கள் இதுவரை எடுக்கவில்லை. மேலும் அடுத்தவாரம் நடைபெறவுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுடைய கூட்டத்தில் நாங்கள் இது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்போம் என்றார்.