வெளிநாடு சென்று நாடு திரும்புவோரை கைது செய்வது ஏன்? : அரியநேந்திரன்
புதிய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் நான் அறிந்தவரை வெளி நாடுகளிலிருந்து தாயகம் திரும்பிய 19 தமிழ் இளைஞர்கள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
புதிய ஆட்சியில் தமிழர்கள் எந்த பலனையும் அனுபவிக்கவில்லை மாறாக வெளிநாடுகளிலிருந்து நாடுதிரும்பிய தமிழ் இளைஞர்களை கைது செய்வது தான் எமக்கு கிடைத்த நல்லாட்சி என்றும் அவர் கூறினார்.
வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தி;ல் வைத்து கைதுசெய்யப்படுவது தொடர்பாக அவரிடம் கேட்டபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்
மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்திற்குட்பட்ட பன்குடாவெளியைச் சேர்ந்த 30 வயதுடைய கோணேபிள்ளை குகதர்ஷன் என்னும் இளைஞன் பஹரைன் நாட்டிலிருந்து தாயகம் திரும்பும் போது குற்றத் தடுப்பு பெரிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் என்னிடம் முறையிட்டனர்.
குறித்த இளைஞன் பல தடவை மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று நாடுதிரும்பியுள்ளார். இறுதியாக பஹ்ரைன் நாட்டில் தொழில் புரிந்து தமது கிராமத்தில் திருவிழா நடைபெறும் மாரியம்மன் ஆலயத்திற்கு நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக வந்த வேளை குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்
புதிய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பிய 19 தமிழ் இளைஞர்கள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக உரிய அமைச்சருக்கு பலமுறை பாராளுமன்றத்தில் கூறியுள்ளோம். இதுதொடர்பாக உரிய நடவடிக்கையெடுக்கப்படும் என அவர் எம்மிடம் கூறியிருந்தும் கைதுசெய்யப்படும் நடவடிக்கை தொடர்ந்த வண்ணமே உள்ளது.
தற்போது பாராளுன்றம் கலைக்கப்பட்ட நிலையில் பன்குடாவெளி இளைஞன் கைதுசெய்யப்பட்ட விடயத்தை பார்க்கும் போது தற்போதைய சூழ்நிiயில் புலம்பெயர்ந்து மற்றும் தொழிலுக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்குச்; சென்றுள்ள எமது உறவுகள் பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்து அடுத்த ஆட்சியமைக்கப்படும் வரை நாடுதிரும்புவதைத் தவிர்த்துக்கொள்வது ஆரோக்கியமான விடயமாகவிருக்கும்.
தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசாங்கத்தை விலியுறுத்தும் நிலையில் 19 தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகளை புறக்கணித்து இன்றும் கைதுசெய்வதிலேயே இந்த அரசாங்கம் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.
போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறும் அரசாங்கம் ஏன் இன்னும் தமிழ் இளைஞர்களை கைதுசெய்கிறது. இந்த நாட்டிலே குற்றம்செய்தவர்கள் சுதந்திரமாக நடமாடும் நிலையில் தொழிலுக்காக வெளிநாடுகளுக்குச் சென்று நாடுதிரும்பும் அப்பாவிகளை கைதுசெய்து எதனை சாதிக்க நினைக்கிறார்கள் என்றும் கேள்வியெழுப்பனார்.