சிறிய குழுவினரின் சமஷ்டி கோரிக்கையால் நாட்டை பிளவுபடுத்த முடியாது! என்கிறார் சம்பிக்க
நாட்டில் வாழும் சிறிய குழுவினரின் சமஷ்டி கோரிக்கையின் காரணமாக நாட்டை ஒருபோதும் பிளவுபடுத்த முடியாது.
இனிமேல் பயங்கரவாதத்திற்கும் பிரிவினைவாதத்திற்கும் இடமில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
சர்வதேசத்திடம் இலங்கையை பலிகொடுத்த மஹிந்த ராஜபக் ஷவினால் எமது இராணுவத்தை காப்பாற்ற முடியாது. புதிய ஆட்சியின் கீழ் சர்வதேசத்தில் உரிய பதிலளிக்கும் பொறிமுறையை மைத்திரி- – ரணில் உறவினாலான அரசு ஆரம்பிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளரும், பொரளை தொகுதி அமைப்பாளருமான ஜயந்த டி சில்வாவின் ஏற்பாட்டில் நேற்று மாலை பொரளை சந்தியில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேலும் அங்கு உரை நிகழ்த்துகையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இரண்டு காரணங்களை மையமாக கொண்டு பிரதமர் கதிரையில் அமர முடியாது. இதற்கமைய மஹிந்தவிற்காக கோஷமிடக் கூடியவர்கள் ஒன்றை மாத்திரம் புரிந்து கொள்ள வேண்டும். அரசியலமைப்பினை நன்கு ஆராய்ந்து தேர்தலில் களமிறங்க வேண்டும்.
அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தின் பிரதமரை ஜனாதிபதியே நியமிக்க வேண்டும். அவரின் பரிந்துரைக்கு பாத்திரமானவரே நாட்டின் பிரதமராக முடியும். இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்த ராஜபக் ஷவிற்கு எந்த காரணம் கொண்டு பிரதமர் பதவியை வழங்கப்போவதில்லை என்றும், அவர் தேர்தலில் தோல்வி காண்பார் என்றும் தெட்ட தெளிவாக நாட்டு மக்களுக்கு தனது உரையின் போது குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறான தொரு தருணத்தில் மஹிந்தவின் பிரதமர் கனவு ஒருபோதும் பலிக்காது. அதேபோன்று பாராளுமன்றத்தின் பிரதமராகுவதற்கு மக்களின் ஆணை மஹிந்தவிற்கு கிடைக்க வேண்டும். இத்தகைய நிலையில் நாட்டில் எக்காரணம் கொண்டும் மக்களின் பணங்களை கொள்ளையடித்த முன்னாள் ஜனாதிபதிக்கு மக்களின் ஆணை ஒருபோதும் கிடைக்கப் பெறாது.
ஆகையால் மேற்குறிப்பிட்ட இரண்டு காரணங்களை கருத்திற் கொண்டு மஹிந்த ராஜபக் ஷவினால் பிரதமர் கதிரையில் அமர்வதனை நினைத்துக் கூட பார்க்க முடியாது. மஹிந்த ராஜபக் ஷவின் காலத்தில் நஷ்டத்தில் இயங்கிய அரச நிறுவனங்களை உரிய திட்டமிடலுடன் சரியான பாதைக்கு கொண்டு வந்ததது மாத்திரமின்றி, இலாபம் ஈட்டு நிறுவனமாகவும் மாற்றியுள்ளோம்.
எனினும் ரணில் விக்கிரமசிங்க நாட்டை பொறுப்பேற்றால் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தி விடுவார் என்றும் நாட்டை இரண்டாக பிளவுபடுத்தி விடுவார் என்றும் மஹிந்த அணியினர் பொய்யான பீதியை நாட்டு மக்களிடம் பரப்பி வருகின்றனர். ஆகவே இந்த விடயத்தில் மக்கள் எக்காரணம் கொண்டும் பீதி அடையத் தேவையில்லை.
நாட்டிற்கு துரோகம் இழைக்கும் வகையில் விடுதலைப் புலிகளுடன் தொடர்பினை முன்னெடுத்து திறைசேரி நிதியிலிருந்து புலிகளுக்கு இலஞ்சம் வழங்கியவர் மஹிந்த ராஜபக் ஷவாவார். எவரை கொன்று குவித்தாலும் கவலையில்லை. தன்னுடைய குடும்பத்தவர்கள் எவரையும் கொலை செய்ய கூடாது என்ற உடன்படிக்கையின் பிரகாரமே அவர் திறைசேரி நிதியை விடுதலைப் புலிகளுக்கு வழங்கினார்.
பயங்கரவாத யுத்தத்தை நிறைவு செய்வதற்கு நாமே அழுத்தம் பிரயோகிக்கும் சக்தியாக விளங்கினோம். இந்நிலையில் மஹிந்த ராஜபக் ஷவிற்கு யுத்தத்தை நிறைவு செய்யும் நோக்கம் ஒருபோதும் இருந்ததில்லை.
இந்நிலையில் நாட்டை பிளவுப்படுத்துவதற்கோ அல்லது பயங்கரவாதத்தை ஏற்படுத்துவதற்கோ இனிமேல் இடமளிக்க போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் உறுதிபட தெரிவித்துள்ளனர். அதேபோன்று மஹிந்த ராஜபக் ஷவும் அதனை வழிமொழிந்துள்ளார். இந்நிலையில் நாட்டை பிளவுப்படுத்தும் நோக்கம் எவருடைய சிந்தனையிலும் இல்லை. நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளது.
பிரிவினைவாதத்திற்கு இனிமேல் ஒருபோதும் இடமில்லை. நாட்டில் ஒரு சிலகுழு மாத்திரம் சமஷ்டியை கோரி நிற்பதனால் நாட்டை பிளவுப்படுத்த முடியாது. குறித்த குழுக்களினால் நீண்டகாலமாக குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது. அதனால் நாடு பிளவடையும் என்று ஒருபோதும் கூறமுடியாது. அதற்கு நாம் இடமளிக்க போவதுமில்லை.
அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் திறனற்ற கொள்கையின் காரணமாக தற்போது சர்வதேசத்தின் மத்தியில் இலங்கைக்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. அவரினால் சர்வதேசத்திடமிருந்து நாட்டிற்காக உழைத்த இராணுவ வீரர்களை காப்பாற்ற முடியாமல் போனது. ஆனால் மைத்திரி-–ரணில் உறவினூடாக சர்வதேசத்திடமிருந்து நாட்டையும் இராணுவத்தையும் நாம் காப்பாற்றுவோம். சர்வதேசத் து டன் உறவினை பலப்படுத்தி உரிய பதிலை நாம் வழங்குவோம் என்று அவர் குறிப்பிட்டார்.