வடக்கில் சட்டவிரோத சுவரொட்டிகளாம் – 1980களின் திரும்பும் நிலை! எச்சரிக்கிறார் கோத்தா
வடக்கில் சட்டத்தை மீறி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருவதாகவும், இந்த நிலை நீடித்தால், அங்கு 1980களில் ஏற்பட்ட நிலை ஏற்படும் என்றும் எச்சரித்திருக்கிறார் இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.
பண்டாரகமவில் உள்ள மைத்ரி மண்டபத்தில் நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர், இவ்வாறு கூறியிருக்கிறார். மைத்திரிபால சிறிசேன- ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் காட்டும் அக்கறையீனத்தினால், வடக்கில் சட்டத்துக்கு விரோதமான சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன.
இது போன்ற நிலை தான் 1980களிலும் காணப்பட்டது. நாட்டின் பாதுகாப்பை கவனிக்காது விட்டால், நாட்டில் மீண்டும் போர் ஒன்று ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், வடக்கில் எத்தகைய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன என்ற தகவலை கோத்தாபய ராஜபக்ச வெளியிடவில்லை. தேர்தல் சட்டங்களை மீறி ஒட்டப்படும் பரப்புரைச் சுவரொட்டிகளையே அவர் அவ்வாறு குறிப்பிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
எனினும், இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும், தேர்தல் சட்டங்களை மீறி சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்ற நிலையில், வடக்கில் மட்டும் தான் அவை ஒட்டப்படுவது போன்று கோத்தாபய ராஜபக்ச பரப்புரை செய்து வருகிறார்.
கெபிற்றிகொல்லாவ பகுதியில் போலியான இராணுவ வாகன இலக்கத் தகடு பொருத்தப்பட்ட வாகனத்தில், அனுராதபுர மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் விமல் வீரவன்சவுக்கு நெருக்கமானவரான வீரகுமார திசநாயக்கவின் சுவரொட்டிகள் அண்மையில் கைப்பற்றப்பட்டிருந்தன.இந்த வாகனத்தை ஓட்டிச் சென்ற இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற சார்ஜன்ட் மேஜர் கைது செய்யகப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.