Breaking News

தமிழ் தேசியத்தின் உயர்வுக்கா, அழிவுக்கா தமிழ் மக்கள் வாக்களிக்கப் போகின்றனர்?

வடகிழக்கு தமிழ் மக்கள் எமக்கே உரித்தான சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தேசமாக வாழப் போகிறோமா?





அல்லது 13ம் திருத்தச் சட்டத்தின் கீழ் சிறீலங்காவின் ஒற்றையாட்சிக்குள் முடங்கி கடந்த 60 வருடங்கள் கொடுத்த உழப்பை,  தியாகங்களை சிறுமைப் படுத்தப்போகிறோமா? என்பதை தீர்மானிக்கும் நாள் நெருங்குகிறது.

தமிழ்தேசிய மக்கள் முன்னணி இரு தேசங்கள் ஒரு நாடு என்னும் கொள்கை அடிப்படையில் தொடர்ந்தும் பயணிக்கும். மக்கள் தமிழ்தேசியத்தின் உயர்ச்சிக்கா? அழிவுக்கா? வாக்களிக்கப் போகிறார்கள் என்பதை தீர்மானிக்கவேண்டும். என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நிலை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். 

குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் வடகிழக்கு மாகாணங்களில் தேர்தலை சந்திக்கவுள்ளது. எம்மை பொறுத்தமட்டில் நடைபெறவிருக்கும் தேர்தல் ஒரு திருப்புமுனையான தேர்தல். இந்நிலையில் மக்கள் தெளிவான தீர்மானத்தை எடுக்க வேண்டும். நாம் கடந்த 5வருடங்களாக தொடர்ச்சியாக கூறிக் கொண்டிருக்கும் இரு தேசங்கள் ஒரு நாடு என்ற கொள்கையின் அடிப்படையில் தேர்தலை சந்திக்கவுள்ளோம்.

இந்நிலையில் தமிழ் மக்கள் தமிழ்தேசியத்தின் வளர்ச்சிக்கா? அழிவுக்கா? வாக்களிக்கப்போகிறீர்கள் என்பதை தீர்மானிக்கவேண்டும். தமிழ் மக்கள் கடந்த 60 வருடங்கள் ஜனநாயக வழி மற்றும் ஆயுத வழியில் உரிமைகளுக்காக போராடியிருக்கிறோம். இந்த வழிகளில் நாங்கள் கொடுத்த உழைப்புக்கும், தியாகங்களுக்குமான விலை என்பது,

தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையுடன் ஒரு தனித்துவமான தேசமாக வாழ்வது மட்டுமே. போருக்குப் பின்னரும் காணாமல்போனவர்கள் விடயம் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் விடயம், தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், காணி பறிப்பு, இராணுவமயமாக்கல், திட்டமிட்ட குடியேற்றங்கள், பொருளாதாரரீதியில் எம்மை சுரண்டல்,

உள்ளிட்ட கட்டமைப்புசார் இன அழிப்புக்கு எதிரான குரலாக வடகிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒலித்திருக்கின்றது. இதற்கும்மேல் போர் நடைபெற்ற காலங்களில் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு மற்றும் போர்க்குற்றங்களுக்கு எதிராக சர்வதேச மட்டத்திலும் இனத்திற்கான எம் கடமையினை நாங்கள் ஆற்றியிருக்கிறோம், தொடர்ந்தும் ஆற்ற இருக்கிறோம். இந்நிலையில் தமிழ்தேசியத்தின் உயர்ச்சிக்கா? அழிவுக்கா? தமிழர்கள் வாக்களிக்கப்போகிறார்கள் என்பதை தீர்மானிக்கவேண்டிய நாள் நெருங்கிக் கொண்டிருக்கின்றது என்றார்.