Breaking News

மைத்திரிக்குப் பதிலடி கொடுக்க மறந்துபோன மகிந்த

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நேற்று அனுராதபுரவில் மைத்திரிபால சிறிசேனவுக்கு பதிலளிப்பதாக கூறியிருந்த போதிலும், நேற்றைய பரப்புரைக் கூட்டத்தில் அனுபற்றி வாய்திறக்கவில்லை.



மகிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனுவில் இடமளிக்க தான் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும், அவரது நியமனத்தை தாம் அங்கீகரிக்கவில்லை என்றும் தெரிவித்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ச மீண்டும் தோல்வியடைவார் என்றும் கூறியிருந்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றாலும் கூட மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்றும் மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார். இதையடுத்து கடந்த புதன்கிழமை சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்துக்கு வந்த மகிந்த ராஜபக்சவிடம் இதுபற்றி கேள்வி எழுப்பிய போது, வரும் 17ஆம் நாள் அனுராதபுர கூட்டத்தில் பதிலளிப்பதாக கூறிவிட்டுச் சென்றார்.

ஆனால், நேற்று அனுராதபுரவில் நடந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது பரப்புரைக் கூட்டத்தில் அவர், மைத்திரிபால சிறிசேனவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

எனினும், முறைமுகமாக மக்களே தீர்மானிப்பார்கள் -பதிலளிப்பார்கள் என்று கூறியிருந்தார். மகிந்த ராஜபக்சவின் நேற்றைய உரையில், அதிகளவில் இடம் பிடித்திருந்தது ரணில் விக்கிரமசிங்கவும் விடுதலைப் புலிகளும் தான். தான் நான்கு ஆண்டுகளாக கட்டியமைத்த நாட்டை ஆறே மாதங்களில் சீரழித்து விட்டார்கள் என்று மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டினார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பெற்ற வெற்றியை அடிக்கடி சுட்டிக்காட்டி உரையாற்றிய மகிந்த ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்கவை கடுமையாக தாக்கிப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது ஆட்சியில் தவறுகள் நடந்ததாக ஏற்றுக் கொண்ட மகிந்த ராஜபக்ச, புதிய ஆட்சியில் புதிய நாட்டை உருவாக்கப் போவதாகவும் உறுதியளித்துள்ளார்.