பிரபாகரனின் தேவையை நிறைவேற்றுகிறார் ரணில்!- அநுராதபுரத்தில் மஹிந்த குற்றச்சாட்டு
ராஜபக்ஷ குடும்பத்தை அழிப்பதாகவும் குழிதோண்டி புதைப்பதாகவும் ரணில் கூறிவருகின்றார். என்னை அழிப்பதாக கூறும் ரணில் பிரபாகரனை அழிப்பேன் என்றோ குழிதோண்டிப்புதைப்பேன் என்றோ கூறவில்லை.
ஆனால் மறுபுறம் பிரபாகரனும் ராஜபக்ஷவை அழிப்பேன் என்று கூறினார். தற்போது பிரபாகரனின் தேவையையே ரணில் நிறைவேற்றிவருகின்றார் என்று முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருணாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
தோல்வியினால் நாங்கள் பாடங்களை கற்றுள்ளோம். இதனால் சர்வதேச தொடர்புகள் குறித்தும் நல்லிணக்கம் இனங்களுக்கிடையிலான தேசிய ஒற்றுமை தொடர்பில் புதிதாக சிந்திப்பதற்கு நாங்கள் முயற்சிக்கின்றோம் என்றும் அவர் மேலும் கூறினார்.
அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், முன்னணியின் வேட்பாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த முதலாவது பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி. சில்வா, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த மற்றும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான விமல் வீரவங்ச, தினேஸ் குணவர்த்தன, உதய கம்மன்பில, திஸ்ஸ விதாரண, ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபா கணேசன் உள்ளிட்டோரும் முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரட்ன மற்றும் முன்னாள் எம்.பி. க்களான சுதர்ஷினி பெர்னாண்டொ புள்ளே, எஸ்.எம். சந்திரசேன, மாலனி பொன்சேகா, உபெக் ஷா ஸ்வர்னமாலி, மஹிந்தானந்த அளுத்கமகே, டிலான் பெரேரா, அனுர பிரியதர்சன யாப்பா, சாலிந்த திசாநாயக்க மஹிந்த யாப்பா அபயவர்த்தன, பண்டு பண்டாரநாயக்க, காமினி லொக்குகே, கீதாஞ்சன குணவர்த்தன, அத்தாவுத செனவிரட்ன, மனுஷ்ய நாணயக்கார, திஸ்ஸ அத்தநாயக்க, ஜனக்க பண்டார தென்னக்கோன் உள்ளிட்ட பலர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
முன்னாள் ஜனாதிபதி அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
இன்று நாங்கள் மிகப்பெரிய புதிய அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளோம். இது தீர்க்கமான பயணமாகும். இந்த அனுராதபுரம் என்பது வெளிநாட்டவர்களை விரட்டியடித்த புனித நகரமாகும். அந்தவகையில் நாட்டுக்கு உயிர்கொடுக்கும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம். 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி நாட்டை மீட்டெடுத்தோம்.
அன்றைய தினம் மக்கள் வீதிகளில் இறங்கி தேசிய கொடியை கைகளில் ஏந்தி வெற்றி கொண்டாடினர். ஆனால் அந்த கைகளினாலேயே என்னை வீட்டுக்கு அனுப்பினர். முக்களின் அந்த ஜனநாயக தீர்ப்பை ஏற்று நான் தேர்தல் முடிவுகள் வெளிவர முன்னரே மெதமுலனவுக்கு சென்றுவிட்டேன். அன்றைய தினத்திலிருந்து மக்கள் என்னை பார்க்க வந்தனர். தூரப் பிரதேசங்களிலிருந்து என்னை பார்க்க வந்தனர். பொதுவாக அரசியல்வாதிகள் மக்களை பார்க்கச் செல்வார்கள். ஆனால் மக்கள் என்னை பார்க்க வந்தனர்.
இதனை தாங்கிகொள்ள முடியாத சிலர் எனக்கு எதிராக சேறுபூச ஆரம்பித்தனர். நாங்கள் சுதந்திரத்துக்கு முன்னரே அரசியல் செய்ய ஆரம்பித்தவர்கள். இதுவரை எமக்கு எதிராக யாரும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கவில்லை. 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்த நாடு எவ்வாறு இருந்தது என்று மக்களுக்கு தெரியும். அனுராதபுர மக்களுக்கு எல்லைக் கிராமங்கள் குறித்தும் அதன் அபாயங்கள் குறித்தும் நன்றாக தெரியும்.
மக்கள் காடுகளில் வாழ்ந்தனர். எனினும் நான் பதவிக்கு வந்ததும் அந்த இரத்த ஆற்றை தடுத்து நிறுத்தினேன். நான் 2005 ஆம் ஆண்டு பதவிக்கு வந்தபோது கிராமங்கள் எவ்வாறு இருந்தன? வீதிகள் இருந்தனவா? ஆனால் நாங்கள் அதனை மாற்றியமைத்தோம். கொழும்பை மிக வேகமாக அபிவிருத்தி அடையும் பிரதேசமாக மாற்றியமைத்தோம்.
வடக்குக்கு 25 வருடங்களாக ரயில் செல்லவில்லை. நாங்கள் அந்த நிலையை மாற்றியமைத்தோம். நாட்டை மீட்டெடுத்தோம் உலகின் பயங்கரமான பயங்கரவாத்தை முடிவுக்கு கொண்டுவந்தோம். நாட்டை மீட்டெடுத்தோம். அது மட்டுமன்றி நாட்டை மிக வேகமாக அபிவிருத்தி செய்தோம். வடக்குக்கு அதிவேக பாதையை நிர்மாணிக்கவும் நடவடிக்கை எடுத்தோம்.
அது மட்டுமல்ல இன்று ஜனநாயகம் குறித்து பேசுகின்றனர். ஜனநாயகத்தை உறுதிபடுத்த நாட்டில் அதிகளவில் தேர்தல்களை நான் நடத்தினேன். வடக்கு மக்களுக்கு வாக்குரிமையை நானே பெற்றுக்கொடுத்தேன். இன்று ரணில் நாடு முழுவதும் சென்று என்னை திட்டுகின்றார். ஆனால் அந்த சூழலை நானே உருவாக்கினேன்.
உயிர்தியாகம் செய்யவும் தயார்
ஜனவரி எட்டாம் திகதி நான் தோற்றதும் உடனே சென்றுவிட்டேன். ரணிலை அழைத்து பொறுப்புக்கொடுத்துவிட்டு சென்றேன். கட்சியை ஏழு நாட்களில் பொறுப்புக் கொடுத்தேன். ஆனால் 2005 ஆம் ஆண்டு நான் வெற்றிபெற்றதும் ஏழு மாதங்களின் பின்னரே கட்சியை நான் பொறுப்பெடுத்தேன். சுதந்திரக் கட்சியை பாதுகாப்பதற்காக உயிர் தியாகமும் செய்வதற்கு தயாராக இருக்கின்றேன். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பாதுகாக்க உயிர் தியாகமும் செய்ய தயாராக இருக்கின்றேன்.
இராணுவ புரட்சி என்றனர்
நான் 9 ஆம் திகதி காலை அலரி மாளிகையை விட்டு சென்றதும் உலக நாடுகளின் தலைவர்கள் என்னை வாழ்த்தினர். ஆனால் என்மீது இராணுவ சதி குற்றச்சாட்டை முன்வைத்தனர். சட்டமா அதிபரையும் பிரதம நீதியரசரையும் அழைத்து யாராவது இராணுவ புரட்சி செய்வார்களா? இவை நகைச்சுவையாகும். அதனை தற்போது இவர்கள் கைவிட்டுள்ளனர்.
தற்போது இராணுவ வீர்ர்களை சிறையில் அடைத்துள்ளனர். அரச ஊழியர்களை விசாரிக்கின்றனர். இதுவரை 898 அரச ஊழியர்களை விசாரித்துள்ளனர். துப்பாக்கியை காட்டி விசாரித்துள்ளனர். இதுதான் நல்லாட்சியா? சீன அதிகாரிகளையும் அழைத்து விசாரித்துள்ளனர். இந்த யுகத்தை நாங்கள் மாற்றியமைப்போம். அரச ஊழியர்களை பாதுகாப்போம்.
இவர்களுக்கு வாக்களித்த மக்கள் இதனை எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். தேரர்களிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். அதிகாரத்துக்காக நாட்டையும் காட்டிக்கொடுக்க இவர்கள் தயாராக இருக்கின்றனர். இவர்கள் வரலாற்றில் இந்திய இராணுவத்தை வரவழைத்தமை மற்றும் புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தமை என்பனவற்றை மறந்துவிடவேண்டாம்.
புலிகளை பலப்படுத்தினர்
600 பொலிஸாரை புலிகள் கொன்றமையை தற்போதைய பொலிஸார் மறந்துவிட்டனர். ரணில் போர் நிறுத்த உடன்படிக்கை செய்து நாட்டை பிரிக்க முற்பட்டமையை மறந்துவிடவேண்டாம். இவர்கள் புலிகளை பலப்படுத்தினர். அவ்வாறான செயற்பாடுகளை நான் செய்தேனா? நான் இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் துரோம் இழைக்கவில்லை. நான் வெளிநாட்டவர்களிடம் மண்டியிடவில்லை. ஆனால் என்னை கேவலப்படுத்துகின்றனர்.
என்னை விமர்சிப்பவர்கள் காலையில் விடிந்தவுடன் கண்ணாடி முன் சென்று பாருங்கள். உடை அணிந்து சென்று பாருங்கள். என்னை அரசியலிலிருந்து அகற்ற பாரிய செலவுகளை செய்கின்றனர்.
இதுதான் நான் செய்த தவறா?
நான் நாட்டின் தேசிய சொத்துக்களை விற்கவில்லை. இதுதான் நான் செய்த தவறா? இதுதான் நான் செய்த திருட்டா? என்று கேட்கின்றேன். மஹிந்த குடும்பம் மக்களின் பணத்தை திருடவில்லை. மதுபான அனுமதி பத்திரம் வழங்கவில்லை. கசினோ ஆரம்பிக்கவில்லை. ஆனால் இந்த அரசாங்கம் 300 மதுபான அனுமதி பத்திரங்களை வழங்கியுள்ளது. இந்த அரசாங்கம் கசினோவை நிறுத்தியுள்ளதா? இல்லையே? இவை பற்றி பேசிய தேரர்கள் எங்கே?
இன்று சிலர் 1989 ஆம் ஆண்டுகளில் இளைஞர்களை டயர்களில் போட்டு எரித்த யுகத்தை மறந்துவிட்டனர். தமது விஜேவீரவுக்கு நடந்ததையும் மறந்துவிட்டனர். அதனால்தான் மணி யானையில் தொங்கியுள்ளதாக சோமவங்ச தெரிவித்துள்ளார்.
ஐந்து வருடம் கொடுத்தால் என்ன நடக்கும்
நாங்கள் நாட்டில் பயங்கரவாதத்தை தோற்கடித்தோம். அபிவிருத்தி செய்தோம். 3 இலட்சமாக குறைக்க முயற்சித்த அரச சேவையை 13 இலட்சமாக உயர்த்தினோம். ஆனால் அனைத்து அபிவிருத்தியையும் 100 நாட்களில் நிறுத்தியுள்ளனர். ஆறு மாதங்களில் இப்படி என்றால் ஐந்து வருடங்கள் கொடுத்தால் என்ன நடக்கும்?
80களின் நிலை உருவாகிறது
அரசாங்கத்தை அமைக்க உதவியவர்களை மகிழ்ச்சிபடுத்துவதே இவர்களின் பொருளாதாரக் கொள்கையாக உள்ளது. 1977 ஆம் ஆண்டு செய்ததை மீண்டும் செய்ய ஆரம்பித்துள்ளனர். வடக்கில் பெண்கள் தனித்து பயணம் செய்ய முடியாமல் உள்ளது.புலிகள் இருந்தால் நல்லது என்று மக்கள் கூறுமளவுக்கு நிலைமை மாறியுள்ளது. வடக்குக்கு மக்கள் செல்ல தற்போது ஆர்வம் காட்டுவதில்லை. 80 களில் புலிகளின் ஆரம்பத்தின்போது இவ்வாறான நிலையே காணப்பட்டது.
மத்திய வங்கியில் இடம்பெற்றுள்ள ஊழல் மிகவும் பெரியதாகும். 6000 கோடி ரூபா ஊழல் செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு பாரிய இழப்பை சந்தித்துள்ளது. மாற்றம் என்று கூறி அழிவை செய்துள்ளனர். 2005 ஆம் ஆண்டில் புதிய நாட்டை கட்டியெழுப்பினோம். 2010 இல் நாட்டை அபிவிருத்தி செய்தோம்.
தோல்வியினால்பாடம் கற்றுள்ளோம்
இந்நிலையில் தோல்வியிலும் நாங்கள் பாடங்களை கற்றுள்ளோம். தோல்வியினால் சர்வதேச தொடர்புகள் குறித்து புதிதாக சிந்திப்பதற்கு முயற்சிக்கின்றோம். நல்லிணக்கம், இனங்களுக்கு இடையில் தேசிய ஒற்றுமையை உருவாக்குவது தொடர்பில் புதிதாக சிந்திப்பதற்கு நாங்கள் தற்போது முயற்சிக்கின்றோம். குறிப்பாக சம உரிமை, மத உரிமை என்பனவற்றை உறுதிபடுத்துவது குறித்து புதிதாக சிந்திக்கின்றோம்.
புதிதாக சிந்திப்போம்
முஸ்லிம் மக்களின், தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிபடுத்துவது குறித்து நாங்கள் புதிதாதக சிந்திப்போம். இவை தோல்வி எமக்கு கற்றுக்கொடுத்த பாடங்கள்.இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு தடையாக இருப்பவர்கள். தற்போது எம்மிடம் இல்லை. அவர்கள் அந்தப்பக்கம் சென்றுவிட்டனர். எனவே நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை குறித்து நாங்கள் புதிதாக சிந்திப்போம்.
ராஜபக்ஷ குடும்பத்தை அழிப்பதாகவும் குழி தோண்டி புதைப்பதாக ரணில் கூறுகின்றார். அவ்வாறு எனக்கு கூறும் ரணில் பிரபாகரனை அழிப்பதாகவும் குழிதோண்டி புதைப்பதாகவும் கூறவில்லை. மறுபுறம் ராஜபக்ஷவை அழிப்பதாக பிரபாகரன் கூறினார். அதனையே தற்போது இந்த அரசாங்கத்தில் உள்ளவர்கள் கூறுகின்றனர். அப்படியாயின் பிரபாகரனின் தேவையை இவர்கள் நிறைவேற்ற முயற்சிக்கின்றனர்.
2005 ஆம் ஆண்டு எனக்கு 58 எம்.பி. க்களே இருந்தனர். 2015 ஆம் ஆண்டு நான் 128 எம்.பி. க்களுடன் கட்சியை கொடுத்தேன். மக்கள் என்னுடன் உள்ளவரை நான் போலிக் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கவேண்டியதில்லை.